வங்காளதேசம் அணியுடன் நடைபெற்ற நிடஹாஸ் கோப்பை இறுதிப்போட்டியின் கடைசி ஓவரில், அதிகம் பேரை அச்சுறுத்தியவர் தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கர். அந்தத் தொடரில் அதற்கு முன் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் அவர் சிறப்பாகவே விளையாடி இருந்தாலும், அந்த ஒற்றை இன்னிங்ஸ் அவர்மீதான நம்பிக்கையை ஆட்டம் காணச் செய்துவிட்டதோ என்றே அனைவரும் நினைக்கின்றனர்.
இருந்தாலும், அன்றைய ஆட்டத்தின் கடைசி ஓவரில் விஜய் சங்கர் அடித்த பவுண்டரி, இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணம் என சொல்லலாம். குற்றச்சாட்டுகள், தேற்றுதல்களுக்கு மத்தியில் இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர், ‘அன்றைய நாள் எனக்கானது அல்ல. அந்தத் துயரத்தில் இருந்து மீள்வது கடினம்தான் என்றாலும், நான் கடந்துதான் ஆகவேண்டும். அந்த கடைசி நாளைத் தவிர அது எனக்கு மிகச்சிறந்த தொடர்தான். இந்தியாவிற்காக விளையாடும்போது இதை எல்லாம் நாம் கடந்து செல்லவேண்டும் என்பதை நான் நன்கு அறிவேன். ஒருவேளை அந்த வெற்றி என்னால் கிடைத்திருந்தால் சோஷியல் மீடியாக்களில் என்னைக் கொண்டாடி இருப்பார்கள். ஆனால், அதற்கு நேரெதிராக அன்று நடந்தது. இதையெல்லாம் பெரிதுபடுத்தினால் நம்மால் வளரமுடியாது’ என தெரிவித்துள்ளார்.
மேலும், இக்கட்டான சூழலில் பவுண்டரி அடிப்பதற்கு முன்பாக தினேஷ் கார்த்திக் என்னிடம் வந்து, ‘உன் சமநிலையைத் தக்கவைத்துக்கொள்’ எனக் கூறினார். பந்தை பேட்டில் வாங்கினால் போதும் என்றே நினைத்தேன். அது பவுண்டரியாக மாறியது’ எனவும் கூறியுள்ளார்.
நீண்டகால கிரிக்கெட் அனுபவம் இருந்தாலும், அணியின் மொத்த சுமையும் தலைமேல் இருக்கும்போது, நிதானமாக ஆடும் வீரர் வெகுசிலரே எனும்போது விஜய் சங்கர் மட்டும் அதில் விதிவிலக்கா என்ன?