பெண்களுக்கான ஆசியக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணியும் இலங்கை மகளிர் அணியும் மோத உள்ளன.
வங்கதேசத்தில் நடைபெற்று வரும் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றது. தாய்லாந்தும் இந்தியாவும் மோதிய முதல் அரையிறுதியில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்களை எடுத்தது. அடுத்து ஆடிய தாய்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்களை மட்டுமே எடுத்து 74 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்தது. தாய்லாந்துடன் வெற்றி பெற்றதன் மூலம் 8 ஆவது முறையாக ஆசியக்கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது.
பாகிஸ்தான் இலங்கை மோதிய இரண்டாவது அரையிறுதியில் முதலில் விளையாடிய இலங்கை 6 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்களை எடுத்தது. இதன் பின் 123 ரன்கள் இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இறுதி ஓவரில் வெற்றிக்கு பாகிஸ்தான் அணிக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 7 ரன்களை எடுத்து 1 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. இதனையடுத்து நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியாவும் இலங்கையும் மோதுகின்றன.
ஆசியக்கோப்பையில் பந்துவீச்சில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் இந்தியாவின் தீப்தி சர்மா 13 விக்கெட்களை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். அதிக ரன்களை எடுத்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 215 ரன்களை எடுத்து முதலிடத்தில் உள்ளார். அதிக வெற்றிகளைப் பெற்றதிலும் இந்திய அணியே முதலிடத்திலுள்ளது.