இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் பங்கேற்கிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் நாக்பூரில் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மோதும் ஆஸிஸ் தொடர் போன்று சமீப காலங்களில் அதிக கவனம் பெற்று வரும் டெஸ்ட் தொடர் பார்டர் கவாஸ்கர் கோப்பை. 2023ம் ஆண்டுக்கான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் நேற்று நாக்பூரில் தொடங்கியது.
இதில் இந்திய அணி அனைவரும் எதிர்பார்த்தது போலவே இரு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது. சூர்யகுமார் யாதவ் மற்றும் ஸ்ரீகர் பரத் இந்த போட்டியின் மூலம் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டனர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஜடேஜா அணிக்கு திரும்பினார். நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வார்னர் மற்றும் கவாஜா 1 ரன்னில் ஷமி மற்றும் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த லபுச்சானே மற்றும் ஸ்மித் நிலைத்து நின்று ரன்களை சேர்த்தாலும் ஜடேஜா அவர்கள் இருவரையும் வீழ்த்தி வெளியில் அனுப்பினார்.
தொடர்ந்து அசத்திய ஜடேஜா முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை வீழ்த்தினார். மறுபுறம் கைகொடுத்த அஸ்வின் அவர் பங்கிற்கு 3 விக்கெட்களை வீழ்த்த, ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக லபுசானே 49 ரன்களும் ஸ்மித் 37 ரன்களும் அலெக்ஸ் கேரி 36 ரன்களையும் எடுத்தனர். தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆரம்பம் முதலே அடித்து ஆட ஆரம்பித்தார். எதிர்புறம் ராகுல் மிக மெதுவாக ஆட 71 பந்துகளை ஆடி 20 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். சிறப்பாக ஆடிய ரோஹித் சர்மா 69 பந்துகளில் 56 ரன்களை விளாசினார். இதில் 9 பவுண்டரிகளும் 1 சிக்ஸரும் அடங்கும். ரோஹித் சர்மாவும் அஸ்வினும் களத்தில் உள்ளனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 77 ரன்களை எடுத்து 1 விக்கெட்டை இழந்துள்ளது.
நேற்றைய நாள் முடிந்தபின் ஜடேஜா அளித்த பேட்டியில், “நான் பந்து வீசிய விதத்தில் மிகவும் மகிழ்ச்சி. நான் என் பந்துவீச்சை ரசித்துக்கொண்டிருந்தேன். 5 மாதங்களுக்கு பிறகு விளையாடுவது, டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது கடினமானது. நான் அதற்குத் தயாராக இருந்தேன். என் உடற்தகுதி மற்றும் என்சிஏவில் எனது திறமைகள் ஆகியவற்றில் கடுமையாக உழைத்தேன். நான் நீண்ட நாட்களுக்குப் பிறகு முதல் தர ஆட்டத்தில் (ரஞ்சி) விளையாடினேன், கிட்டத்தட்ட 42 ஓவர்கள் வீசினேன். இங்கு வந்து டெஸ்ட் போட்டியில் விளையாடியது எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்தது. நாக்பூர் ஆடுகளம் முழுக்க முழுக்க பந்துவீச்சாளர்களுக்கு ஏற்ற ஆடுகளமாக இருக்கவில்லை. இதனால் பேட்டர்கள் பந்துகளை தடுத்து ஆட சிரமப் படவில்லை. ஆடுகளம் மெதுவாக இருந்தது. அதை பயன்படுத்தி பந்து வீசியதால் பலன் கிடைத்தது” என்றார்.
அதே நேரத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் அஸ்வின் பந்துவீச்சை பெரிய அச்சுறுத்தலாக எண்ணி இருந்தனர். அதனால் அவரை சுற்றியே தங்களது வியூகங்களை வகுத்தனர். ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக ஜடேஜா 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். சர்வதேச கிரிக்கெட்டில் 111 ஆவது முறையாக 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.