இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக நேற்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதில், ஆஸ்திரேலியா அணி 35.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 39.5 ஓவர்களில் ஐந்து விக்கெட்களை இழந்து 191 ரன்கள் எடுத்து முதல் ஒருநாள் போட்டியை வென்றது.
இந்நிலையில், பகல் இரவு ஆட்டமாக இந்தியா - ஆஸ்திரேலியாவின் மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் 22ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை ஏற்கனவே ஆன்லைனில் துவங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நேரடி டிக்கெட் விற்பனை துவங்கவுள்ளது. இன்று காலை 11 மணிக்கு துவங்கவுள்ள டிக்கெட் விற்பனைக்கு அதிகாலை முதலே கிரிக்கெட் ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் வரிசையில் காத்திருக்கின்றனர்.
சி, டி, இ ஆகிய லோயர் கேலரிக்கான டிக்கெட் விலை ரூ. 1,200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒருவருக்கு இரண்டு டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.