ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீராங்கனையான கோமதியின் ஆசியப் போட்டி தங்கப் பதக்கம் பறிக்கப்படுவதோடு, அவருக்குப் போட்டிகளில் பங்கேற்க நான்கு ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதம் தோகாவில் நடந்த ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் பிரிவில் தங்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து தடை செய்யப்பட்ட ஸ்டெராய்டு போன்ற பொருட்களைப் பயன்படுத்தியதற்கான முகாந்திரம் இருப்பதால் அவருக்கு இடைக்காலத் தடை விதித்து இந்தியத் தடகள சம்மேளனம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
ஆசியப் போட்டியில் போது ஊக்கமருந்து சோதனைக்காகக் கோமதியின் சோதனை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் நான்ட்ரோலோன் எனும் ஸ்டெராய்ட் மருந்தை அவர் எடுத்துக்கொண்டது உறுதியாகியுள்ளதாகவும் என்று ஆசியத் தடகள சம்மேளனம் தெரிவித்தது. இதனையடுத்து நடத்தப்பட்ட 'பி' மாதிரி சோதனையும் கோமதிக்கு எதிராக அமைந்த நிலையில், அவருக்குப் போட்டிகளில் பங்கேற்க நான்கு ஆண்டுகள் தடை விதித்துள்ளது அத்லெடிக் இன்டெக்ரிடி யூனிட் அமைப்பு.