Skip to main content

சென்னை டி.நகர் உஸ்மான் சாலையின் கதை!!!

Published on 22/08/2018 | Edited on 22/08/2018
சென்னை டி.நகரில் எந்நேரமும் பரபரப்பாக வர்த்தகம் நடைபெறும் உஸ்மான் சாலை யார் பெயரால் அழைக்கப்படுகிறது தெரியுமா? பிரிட்டிஷ் ஆட்சியில் உருவாக்கப்பட்ட சென்னை மாகாணம் அல்லது மெட்ராஸ் பிரசிடென்ஸியில் நீதிக்கட்சி ஆட்சியில் அமைச்சராகவும், பின்னர் மாகாணத்தின் தற்காலிக கவர்னராகவும் பொறுப்பு வகித்தவர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

usman street

 
1884 ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த முகமது யாகூப் சாகிப் பகதூர் என்பவரின் மகனாக பிறந்தவர் கான் பகதூர் சர் முகமது உஸ்மான். இவர்களுடைய பூர்வீகம் தஞ்சாவூர் என்று தெரியவருகிறது. சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர்.
 
 
சென்னை மாகாணத்தை பொப்பிலி ராஜா என்று அழைக்கப்படும் சர் ராமகிருஷ்ண ரங்காராவ் தலைமையில் நீதிக்கட்சி ஆட்சி செய்த போது அந்த அமைச்சரவையில் உஸ்மான் இடம்பெற்றிருந்தார்.  1934ம் ஆண்டு மே 16ம் தேதி சென்னை மாகாணத்தின் தற்காலிக ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

 

 


 
சென்னை மாகாண மாஜிஸ்திரேட் ஆகவும், சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராகவும், சென்னை நகர செரீப்பாகவும், சென்னை மாநகராட்சி தலைவராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார். 1925 முதல் 1934 வரை சென்னை மாகாண நிர்வாகக்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்தார்.  சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராகவும், 1942 முதல் 1946 வரை பிரிட்டிஷ் வைசிராயின் நிர்வாகக்குழுவில் உறுப்பினராக மத்திய அரசிலும் பணியாற்றினார்.

 
1960 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி மரணமடையும்வரை மெட்ராஸ் சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார். 1925 ஆம் ஆண்டில் இந்திய மருத்துவக் கல்வி அமைப்பு உருவாகக் காரணமான அரசுக் குழுவுக்கு இவர் தலைவராக இருந்தார்.  அரசுக்கு இவர் அளித்த அறிக்கை உஸ்மான் அறிக்கை என்றே அழைக்கப்படுகிறது. இந்தியாவில் வெளியிடப்பட்ட மிக முக்கியமான முதல் சுகாதார அறிக்கை அதுதான். உஸ்மானை யுனானி மருத்துவர் என்றே மரியாதையாக அழைப்பார்கள். இத்தனைக்கும் அவர் மருத்துவ பயிற்சியில் ஈடுபட்டதில்லை. அவருடைய மனைவி வழி மற்றும் பெற்றோர் வழி தாத்தாக்கள் யுனானி வைத்தியத்தில் சிறந்து விளங்கியவர்கள்.

 

 


 
உஸ்மானின் மிகப்பிரமாண்டமான பங்களா தேனாம்பேட்டையில் அமைந்திருந்தது. அதில்தான் அவருடைய கூட்டுக் குடும்பம் வசித்தது. அரண்மனை போன்ற அந்த பங்களா 8000 சதுர அடி பரப்பில் அமைந்திருந்தது. தோட்டத்துடன் அமைந்த அந்த பங்களாவில் வேலைக்காரர்களுக்கான குடியிருப்புகளும் அமைந்திருந்தன.
 
 
1993ம் ஆண்டு அந்த பங்களா இடிக்கப்பட்டு அபார்ட்மெண்டுகள் கட்டப்பட்டன. உஸ்மான் தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. அவர் தனது தம்பியின் மகனையும் மகளையும் தத்தெடுத்து வளர்த்திருக்கிறார். தத்துப் பிள்ளையை திருமணம் செய்த பாத்திமா யாகூப்பிற்கு இப்போது 76 வயது ஆகிறது. 1953ல் பாத்திமாவுக்கு திருமணம் நடைபெற்றபோது அவருடைய வயது 10. 1960 ஆம் ஆண்டு பாம்பு கடித்ததால் உடல்நலிவுற்று உஸ்மான் இறந்ததாக கூறப்படுகிறது. அவர் இறந்த பிறகு அவருடைய சொத்து தொடர்பான வழக்குகளுக்காக முதன்முறையாக அரசு பஸ்களில் பயணிக்க நேர்ந்ததாக சொல்கிறார் அவருடைய மனைவி பாத்திமா.

 

 

 

தனது கணவரின் பெயர் மறக்கப்பட்டுவிட்டதைக்கூட பாத்திமா பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை. தனி நபருக்காக புகழ் கிடைக்கக்கூடாது. அவருடைய பணிகளைத்தான் மக்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று உஸ்மான் சொல்வாராம்.
 

நன்றி - The Hindu
 
 
 
 
 
 
 

சார்ந்த செய்திகள்

Next Story

திக் திக் நொடிகள்... சென்னையை கலங்கடித்த சம்பவம்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Tick-tick seconds... a child saved by tact

சென்னை ஆவடியில் நான்காவது மாடியில் இருந்து கீழே தவறிவிழ முற்பட்ட நிலையில் குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை ஆவடி பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன்-ரம்யா தம்பதிக்கு 7 மாத குழந்தை உள்ளது. இன்று காலை குழந்தையின் தாய் ரம்யா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது கை தவறி குழந்தை நான்காவது மாடியில் இருந்து இரண்டாவது தளத்தில் உள்ள வெளிப்புற கூரை மீது விழுந்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டனர். கீழே பெட்ஷீட் போன்றவை விரிக்கப்பட்டு குழந்தை விழுந்தால் பிடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திக் திக் நொடிகளை கடந்து அந்த பகுதியை சேர்ந்த ஹரி என்ற இளைஞர் ஒருவர் சாதுர்யமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்டார். காப்பாற்றப்பட்ட குழந்தையானது உடனடியாக ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.