
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக போலி சன்றிதழ் விவகாரத்தில் மேலும் 4 பேரை கடலூர் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணை தேர்வுக்கட்டுபாட்டு அலுவலர் மாணிக்க வாசகம் மற்றும் பிரிவு அதிகாரி சேகர் ஆகிய இருவரும் கடந்த 2024 ஜூன் 17ஆம் தேதி காலை சிதம்பரம் அருகே கோவிலாம்பூண்டி எம்.எம்.ஐ நகரில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது அண்ணாமலைப் பல்கலைகழக சான்றிதழ்கள் சில எம்.ஐ நகர் பாலம் அருகே கிடப்பதாக அப்பகுதியை சேர்ந்த சிலர் அவர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து 2 பேரும் சம்பவ இடத்துக்கு வந்த பார்வையிட்ட போது அந்த சான்றிதழ்கள் அனைத்தும் போலியானது என்பது தெரியவந்தது.
இது குறித்து அப்போதைய சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதிக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு கிடந்த போலி சான்றிதழ்களை கைப்பற்றினர். அதே இடத்தில் ஒரு தொலைபேசி எண் அடங்கிய செல்போன் பில்லும் கைப்பற்றப்பட்டது. இதனை தொடர்ந்து, இந்த விவகாரத்தை விசாரிக்க தனிப்பைடை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் விசாரணை செய்து, இதில் தொடர்புடைய சிதம்பரம் மன்மதசாமி நகர் நடராஜ ரத்தின தீட்சிதர் மகன் சங்கர் தீட்சிதர்(37), சிதம்பரம், மீதிகுடிரோடு, கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்த சுப்பையா மகன் நாகப்பன்(50) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
இதனையடுத்து, இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, கடலூர் சிபிசிஐடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் மாயவேல் மற்றும் போலீஸார் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு இதில் தொடர்புடைய 10 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய, சிதம்பரம் பகுதியை சேர்ந்த தங்கராசு மகன்கள் ஒஸ்தின்ராஜா என்கிற கௌதம்(54), நெல்சன் ராஜா(44), நடராஜரத்தினம் மகன் தமிழ்மாறன்(53), வேப்பூர் பகுதியைச் சேர்ந்த ராசு மகன் தங்கதுரை(46) ஆகிய 4 பேரையும் இன்று (19-02-25) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்