ஸ்பாட் ஃபிக்ஸிங் எனப்படும் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர் நசீர் ஜாம்செட்டுக்கு பத்தாண்டுகள் தடைவிதித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க வீரராக களமிறங்கி வந்தவர் நசீர் ஜாம்செட். இவர்மீது கடந்த 2016-17 காலகட்டத்திற்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் சீசனில், ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக பாகிஸ்தானின் ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணையைத் தொடங்கியது. ஆனால், இந்த விசாரணையில் ஜாம்செட் முறையான ஒத்துழைப்பு அளிக்கவில்லை எனக்கூறி, அவருக்கு ஓராண்டு போட்டிகளில் கலந்துகொள்ளத் தடைவிதிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தத் தடை கடந்த ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், மீண்டும் விசாரணை தொடங்கியது. இந்த விசாரணையில் ஜாம்செட் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், அவருக்கு 10 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடைவிதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் தடையின் மூலம் ஜாம்செட் எந்தவிதமான ஃபார்மேட்டுகளிலும் விளையாட முடியாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஊழல் தடுப்பு வழக்கு தொடர்பான விசாரணை விபரம் : கிரிக்கெட் வீரர் நசீர் ஜாம்செட் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்ட குற்றத்திற்காக, அவருக்கு 10 ஆண்டுகள் தடைவிதித்து ஊழல் தடுப்புப் பிரிவு உத்தரவிட்டுள்ளது” என தகவல் வெளியிட்டுள்ளது.