ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி வீரர் மேக்ஸ்வெல் 19 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 45 ரன்கள் விளாசினார். அவரது அதிரடியான ஆட்டம் இறுதிக் கட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் துரித ரன் சேகரிப்பிற்கு உதவியது.
ஆஸ்திரேலியத் தொடருக்கு முன் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் மேக்ஸ்வெல், கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியில் இடம்பிடித்திருந்தார். அதிரடிக்குப் பெயர்பெற்ற மேக்ஸ்வெல், ஐ.பி.எல் தொடரில் ஒரு சிக்ஸர் கூட அடிக்காமல் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நேற்றைய போட்டியில் அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியத்திலிருந்தே கே.எல்.ராகுல் மற்றும் மேக்ஸ்வெல்லை மையப்படுத்தி மீம்ஸ்கள் வலம்வந்தன. அதில், ஒரு மீம் மேக்ஸ்வெல்லின் கவனத்திற்குச் சென்றுள்ளது.
இந்திய கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ட்விட்டரில், 'ஜிம்மி நீசம் மற்றும் மேக்ஸ்வெல் இருவரது ஆட்டத்தையும் பார்த்த பிறகு கே.எல்.ராகுல் நிலை' எனக் குறிப்பிட்டு, ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். அதைத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஜிம்மி நீசம், அதில் மேக்ஸ்வெல்லையும் பின்னூட்டம் செய்தார்.
அந்தப் பதிவிற்குப் பதிலளித்த மேக்ஸ்வெல், "நான் பேட்டிங் செய்யும் போதே அவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டேன்" எனக் குறிப்பிட்டார். மேக்ஸ்வெல்லின் இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நியூஸிலாந்தைச் சேர்ந்த ஜிம்மி நீசம் ஐ.பி.எல் தொடரில், பஞ்சாப் அணிக்காக விளையாடியவர் ஆவார். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற இருபது ஓவர் போட்டியில், அவரும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
I apologised to him while I was batting ? ? ? #kxipfriends ❤️
— Glenn Maxwell (@Gmaxi_32) November 28, 2020