Skip to main content

பிராவோ, ராயுடு அணியில் இடம் பிடிப்பது எப்போது? சி.எஸ்.கே. பயிற்சியாளர் பதில்!

Published on 30/09/2020 | Edited on 30/09/2020

 

csk coach

 

பிராவோ மற்றும் ராயுடுவின் காயத்தின் தன்மை குறித்தும், அணியில் அவர்கள் மீண்டும் இடம் பிடிப்பது குறித்தும் சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளம்மிங் விளக்கம் அளித்துள்ளார்.

 

13-வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தோனி தலைமையிலான சென்னை அணிக்கு இத்தொடரின் தொடக்கம் பெரும் சொதப்பலாக அமைந்துள்ளது. இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி ஒரு வெற்றி, இரு தோல்விகளும் கண்டுள்ளது. சென்னை அணி வீரர்களின் நிலையான ஆட்டமின்மை, கேப்டன் தோனியின் களமிறங்கும் இடம், முன்னணி வீரர்களான ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் விலகல், ராயுடு மற்றும் பிராவோவின் காயம் எனப் பல்வேறு விஷயங்கள் சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கடைசியாக விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்துள்ள சென்னை அணி வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்பில் தீவிர பயிற்சியில் உள்ளது. இந்நிலையில் சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளம்மிங், ராயுடு மற்றும் பிராவோ காயத்தின் தன்மை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

 

அதில் அவர், "தொடைப்பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பில் இருந்து ராயுடு குணமடைந்துவிட்டார். அவர் அடுத்த போட்டியில் களமிறங்குவார். எந்த இடையூறும் இல்லாமல் அவரால் வலைப்பயிற்சியில் ஈடுபட முடிகிறது" என்றார்.

 

மேலும், பிராவோ குறித்துப் பேசுகையில், "வலைப்பயிற்சியின் போது பிராவோ சிறப்பாக பந்து வீசினார். தோல்வியில் இருந்து நாம் மீண்டு வருவோம். கடந்த காலங்களில் அதை நாம் செய்து காட்டியிருக்கிறோம். இந்தமுறையும் அது நடக்கும்" எனக் கூறினார்.