Skip to main content

கரோனா தடுப்பூசி: கிறிஸ் லின் வெளியிட்ட தகவலால் சர்ச்சை!

Published on 27/04/2021 | Edited on 27/04/2021

 

chris lynn

 

இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்து வருகிறது. கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனையடுத்து இந்திய வீரர் அஸ்வின், ஆஸ்திரேலிய வீரர்கள் கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜாம்பா உள்ளிட்டோர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளனர். முன்னதாக தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்த ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ டை, இந்தியாவில் இருந்து திரும்புவர்களுக்கு தங்கள் நாட்டில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் காரணமாக விலகியதாக கூறியுள்ளார். நான்கு வீரர்கள் விலகிய நிலையில், ஐபிஎல் போட்டிகள் பாதியில் நிறுத்தப்படலாம் என தகவல் கிளம்பியது. ஆனால் திட்டமிட்டபடி ஐபிஎல் தொடர்ந்து நடைபெறும் என இந்தியக் கிரிக்கெட் வாரியத் தலைவர் கங்குலி அறிவித்துள்ளார்.

 

இந்தநிலையில், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின், ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், ஐபிஎல் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய வீரர்களை திங்கட்கிழமை தொடர்புகொண்டு, அவர்களின் உடல்நலம் மற்றும் பயணத்திட்டம் குறித்து விசாரித்ததாக தெரிவித்துள்ளார்.

 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு தான் பதிலளிக்கையில், "ஒவ்வொரு ஐபிஎல் ஒப்பந்தத்திலும் இருந்து கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிற்கு 10 சதவீத வருமானம் கிடைக்கிறது. இந்த வருடம் அந்தப் பணத்தை, ஐபிஎல் தொடர் முடிந்ததும் ஆஸ்திரேலிய வீரர்கள் தனி விமானத்தில் நாடு திரும்புவதற்குப் பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறதா" என கேட்டதாக கூறியுள்ளார்.

 

da

 

தொடர்ந்து அவர், "எங்களைவிட மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால், நாங்கள் கடுமையான கரோனா பாதுகாப்பு வளையத்திலிருந்து செல்கிறோம். மேலும், அடுத்த வாரம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள இருக்கிறோம். எனவே தனி விமானத்தில் நாட்டிற்கு செல்ல அரசு அனுமதிக்கும் என நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.

 

இது தற்போது சர்ச்சையாகி உள்ளது. இந்தியாவில் கரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக புகார்கள் தொடர்ந்து கூறப்பட்டு வரும் நிலையில், கிரிக்கெட் வீரர்களுக்குத் தடுப்பூசி செலுத்துதலில் முன்னுரிமை வழங்கப்படுவது அதிர்ச்சியளிப்பதாக சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.