சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இறுதியில் இந்திய அணி நான்காவது இடத்திற்கான வீரர் இன்றி அவதிப்பட்ட போது, இந்திய அணியில் 4-வது இடத்துக்கு சரியான வீரர் அம்பதி ராயுடுதான் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்தார். அப்படிப்பட்ட ராயுடு பின்னர் உலகக்கோப்பை தொடருக்கு அணியில் சேர்க்கப்படாமல் போனார். அவருக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்பட்டார்.
இதனால் அதிருப்தி அடைந்த அவர், பிசிசிஐ அமைப்பை கலாய்க்கும் வகையில் ட்வீட் ஒன்றை பதிவிட்டார். இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த உலகக்கோப்பை தொடரில் அடுத்தடுத்து இந்திய வீரர்கள் காயமடைந்த போதிலும் அம்பதி ராயுடு அணியில் சேர்க்கப்படவில்லை. அவரை விட அனுபவம் குறைந்த ரிஷப் பந்த், மாயங்க் அகர்வால் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். இவை அனைத்திற்கும் மூல காரணமாக இன்று வரை ரசிகர்களால் பார்க்கப்படுவது அவரது அந்த ஒற்றை ட்வீட் தான்.
இந்த நிலையில் நேற்று ஐஸ்லாந்து நாட்டின் கிரிக்கெட் வாரியம் ஒரு ட்வீட் செய்தது. அதில் "இனி உங்களுக்கு 3 டி கிளாஸ் தேவை இல்லை. எங்கள் நாட்டின் குடியுரிமை விண்ணப்பத்தை படிக்க சாதாரண கண்ணாடி இருந்தால் போதும். எங்களுக்கு உங்களை பிடிக்கும். எங்களோடு வந்து இணைந்துவிடுங்கள் " என அந்த ட்வீட் பதிவிடப்பட்டது. இந்நிலையில் இந்த ட்வீட் வந்து 24 மணிநேரத்திற்குள் தற்போது ராயுடு தனது ஓய்வை அறிவித்துள்ளார். எனவே அவர் ஐஸ்லாந்து அணிக்கு செல்ல வாய்ப்பிருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.