தடகளப் போட்டிகளில் கடந்த 20 ஆண்டுகளாக யாராலும் முறியடிக்கப்படாமல் இருந்த சாதனையை, 21 வயது ஓட்டப்பந்தய வீரர் முறியடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் மாரீஸ் கிரீனி. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு 60 மீட்டர் தூரத்தை 6.39 விநாடிகளில் ஓடி உலகசாதனை படைத்திருந்தார். இதனைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் அல்புகர்கியில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்ட, கிறிஸ்டெய்ன் கோல்மேன் எனும் வீரர் முறியடித்துள்ளார்.
கடந்த ஆண்டு லண்டனில் வைத்து நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில், வெள்ளிப்பதக்கம் வென்ற கிறிஸ்டெய்ன், ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் 60 மீட்டர் தூரத்தை வெறும் 6.34 விநாடிகளில் ஓடி முடித்து சாதனை படைத்தார்.
‘பந்தய தூரத்தை ஓடி முடிக்கையில் எனக்கு எல்லாம் மங்கலாக தெரிந்தது’ என தெரிவித்துள்ள கிறிஸ்டெய்ன், அடுத்த மாதம் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ளும் அமெரிக்க அணிக்கு தலைமை தாங்குகிறார்.
கடந்த மாதம் தெற்கு கரோலினாவில் நடைபெற்ற போட்டியில், 60 மீட்டர் தூரத்தை 6.37 விநாடிகளில் கிறிஸ்டெய்ன் ஓடி முடித்தாலும், தொழில்நுட்ப காரணங்களால் அது கணக்கில் எடுத்துக்கொள்ளப் படவில்லை.
20 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவர் உருவாக்கிவைத்த சாதனையை, 21 ஆண்டுகளுக்குப் பிறகு முறியடித்த ஒருவரை சாதிக்கப் பிறந்தவர் என்று சொல்வதில் தப்பேதும் இல்லையே?