16 ஆவது ஐபிஎல் சீசனின் 35ஆவது லீக் போட்டி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 207 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக கில் 56 ரன்களையும் மில்லர் 46 ரன்களையும் அபினவ் மனோகர் 42 ரன்களையும் எடுத்தனர். மும்பை அணியில் சாவ்லா 3 விக்கெட்களையும் அர்ஜுன் டெண்டுல்கர், பெஹ்ரெண்ட்ராஃப், மெரிட்ரித் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இன்றைய போட்டியில் 207 ரன்களை குவித்ததன் மூலம் குஜராத் அணி தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன்பு கொல்கத்தா அணிக்கெதிராக 204 ரன்களை குவித்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்த போட்டியில் குஜராத் அணி கடைசி 5 ஓவர்களில் மட்டும் 77 ரன்களை குவித்திருந்தது.
208 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய மும்பை அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற மும்பை அணி 90 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து திணறியது. இறுதியில் வதேரா கொஞ்சம் ரன்களை அடிக்க மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 152 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நெஹால் வதேரா 40 ரன்களையும் க்ரீன் 33 ரன்களையும் எடுத்திருந்தனர்.
சிறப்பாக பந்து வீசிய குஜராத் அணியில் நூர் அஹமத் 3 விக்கெட்களையும் மோஹித் சர்மா, ரஷித் கான் தலா 2 விக்கெட்களையும் பாண்டியா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்த போட்டியில் மும்பை அணி நடப்பு ஐபிஎல் தொடரில் மூன்றாவது குறைந்தபட்ச பவர்ப்ளே ஸ்கோரை பதிவு செய்துள்ளது. இது அந்த அணிக்கு இரண்டாவது முறை. முன்னதாக பெங்களூர் அணிக்கு எதிராக 29 ரன்களை எடுத்திருந்தது. முதல் இடத்தில் குஜராத்திற்கு எதிராக ராஜஸ்தான் அணி 26 ரன்களை எடுத்திருந்ததே குறைந்தபட்ச ஸ்கோராக உள்ளது.
ஆப்கானிஸ்தான் பந்துவீசாளர்களான நூர் அகமது மற்றும் ரஷித் கான் இருவரும் இணைந்து 8 ஓவர்களை வீசி 64 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர். இந்த போட்டியின் ஆட்டநாயகனாக அபினவ் மனோஹர் தேர்வு செய்யப்பட்டார்.