அக்டோபர் 16ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கிய 8-வது 20 ஓவர் உலகக் கோப்பை தொடர் நவம்பர் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 16 நாடுகள் இதில் பங்கேற்றுள்ளன.
சூப்பர் 12 சுற்றுக்கு தேர்வான அனைத்து அணிகளும் தங்களது முதல் போட்டியை விளையாடிவிட்ட நிலையில் இரண்டாவது ஆட்டத்திற்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் இன்று பங்களாதேஷ் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் பவுமா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின் ஜோடி சேர்ந்த டி காக் மற்றும் ரூசோ அதிரடியாக ரன்களை சேர்த்தனர். பங்களாதேஷ் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த ரூசோ 56 பந்துகளில் 109 ரன்களை குவித்தார். 20 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்களை இழந்து 205 ரன்கள் குவித்தது.
ரன்ரேட் மிக முக்கியம்; நெதர்லாந்து அணியுடன் மோதும் இந்தியா
இதன் பின் களமிறங்கிய பங்களாதேஷ் அணியில் லிட்டன் தாஸ் தவிர அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். 16.3 ஓவர்களில் அந்த அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 101 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியுற்றது. சிறப்பாக பந்து வீசிய தென் ஆப்பிரிக்க அணியில் நூர்ஜே 3.3 ஓவர்கள் பந்து வீசி 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை எடுத்தார்.
சதமடித்த ரூசோ ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இன்றைய போட்டியில் சதம் அடித்ததன் மூலம் 2022 டி20 உலகக் கோப்பையில் முதல் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.