தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பெண்கள் கால்பந்து போட்டியில் அண்ணாமலை பல்கலைக்கழகம் நடைபெற்றது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி விளையாட்டுத்துறையில் கடந்த 29ம் தேதி முதல் தொடர்ந்து 4 நாட்கள் தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பெண்கள் கால்பந்து போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தது. இதில் 6 மாநிலங்களைச் சேர்ந்த 26 பல்கலைக்கழக அணிகள் பங்கேற்று விளையாடின. இதில் லீக் போட்டிகளின் அடிப்படையில் அண்ணாமலை பல்கலைக்கழக அணி முதலிடத்திலும், வேல்ஸ் இன்டாஸ் சென்னை பல்கலைக்கழக அணி இரண்டாம் இடத்திலும், சேலம் பெரியார் பல்கலைக்கழக அணி மூன்றாம் இடத்தையும், கோயம்புத்தூர் பாரதிதாசன் பல்கலைக்கழக அணி 4-ஆம் இடத்தையும் பெற்றனர்.
வெற்றி பெற்ற நான்கு பல்கலைக்கழக அணிகளும் குவாலியரில் நடைபெறும் அனைத்து இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கால்பந்து போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிக்கும் விழா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக துணைவேந்தர் ராம.கதிரேசன் தலைமை தாங்கினார். துணைவேந்தரின் துணைவியர் சாந்தி கதிரேசன் வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகள் வழங்கினார்.
உடற்கல்வித்துறை தலைவர் செந்தில்வேலன் அனைவரையும் வரவேற்றார். விழாவில் அனைத்து இந்திய பல்கலைக்கழகங்களுக்கான பார்வையாளர் ராம்குமார். கடல்வாழ் உயிரினங்கள் புல முதல்வர் ஆனந்தராமன், பேராசிரியர் மருத்துவர் சண்முகம், உடற்கல்வித்துறை பேராசிரியர்கள் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.
இதில் அண்ணாமலை பல்கலைக்கழக கால்பந்தாட்ட அணியைச் சேர்ந்த சௌமியா, மாளவிகா, சந்தியா ஆகிய மூன்று மாணவிகளும் இந்திய பெண்கள் கால்பந்து அணியில் பங்கேற்று விளையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணாமலை பல்கலைக்கழக கால்பந்து அணி தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கால்பந்து போட்டியில் இதுவரை நான்கு முறை சாம்பியன் பட்டத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.