கருச்சிதைவு பிரச்சனை குறித்து கருவுறுதல் நிபுணர் டாக்டர் தாட்சாயிணி விளக்குகிறார்.
கர்ப்பமானாலும் தானாக கருச்சிதைவு ஏற்படும் பிரச்சனை பலருக்கு இருக்கிறது. இரண்டாவது ஸ்கேன் செய்து பார்ப்பதற்குள் இதயத்துடிப்பு நின்றுவிடுகிறது. உள் உறுப்பில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் கருச்சிதைவு பிரச்சனை குறித்து நம்மிடம் பலர் வருகின்றனர். அவர்களை நாங்கள் முழுமையாக பரிசோதனை செய்வோம். அவர்களுக்கு ஏதேனும் தொற்று பிரச்சனை இருக்கலாம். கணவன் அல்லது மனைவியின் மரபியல் சார்ந்த பிரச்சனையால் கூட இது ஏற்படலாம்.
கருப்பை தொற்று காரணமாகவும் கருச்சிதைவு பிரச்சனை ஏற்படும். தங்களுடைய நேரம், பணம், எனர்ஜி என்று அனைத்தையும் செலவழித்த கணவன், மனைவி இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டவுடன் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். அவர்களுக்கு நாங்கள் கவுன்சிலிங் கொடுப்போம். இந்தப் பிரச்சனை ஏற்படுவதற்கு பெண்களின் வயது ஒரு காரணமாக இருக்கலாம். ஆண்களுக்கு விந்துக்கள் சரியான அளவில் இல்லாமல் இருப்பதும் கூட இதற்கான காரணமாக இருக்கலாம்.
பரிசோதனைகளின் மூலம் நல்ல கருவை மட்டும் பயன்படுத்த நாங்கள் முயற்சி செய்வோம். பலமுறை கருச்சிதைவு ஏற்பட்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன. 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு நல்ல கரு ஏற்படுவது குறைவாகவே இருக்கும். அதைச் சரி செய்வதற்கான மருத்துவ முறைகள் இருக்கின்றன. அவற்றை நாங்கள் அவர்களுக்கு பரிந்துரைப்போம். ஏற்கனவே நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இருக்கும் குடும்பங்களில், அடுத்த குழந்தை பெறுவதற்கு தம்பதியினர் பயப்படுவார்கள்.
முந்தைய நிகழ்வில் ஏற்பட்ட பிரச்சனை என்ன என்பதை நாங்கள் கண்டறிந்து, அதற்கான தீர்வுகளையும் அவர்களுக்கு நாங்கள் வழங்குவோம். இந்த மருத்துவ முறையின் மூலம் பெரும்பாலும் எங்களுக்கு வெற்றியே கிடைத்துள்ளது.