Skip to main content

அதிக உடல் எடை குழந்தைகள் நலனைக் குறிக்கிறதா? - வழியெல்லாம் வாழ்வோம் #3

Published on 14/03/2018 | Edited on 14/03/2018

வழியெல்லாம் வாழ்வோம் #3

உங்கள் குழந்தைகள் நலமா?- பாகம் 1

 

Vazi

 

பொதுவாக நம் வீட்டுக் குழந்தைகளை நாம் நன்றாகக் கவனித்துக் கொள்கிறோம் என்பதன் குறியீடு அவர்கள் ஒல்லியாக இருக்கக்கூடாது என்பதே. "ஏன் புள்ள இப்படி மெலிஞ்சு இருக்கான்-இளைச்சுப் போயிட்டான்?" என்ற வார்த்தைகள் பெற்றோரின் காதுகளில் விஷமாகத்தான் விழும். ஆனால், இப்போது மெலிவான குழந்தைகளைக் காண்பதே அரிதாகிவிட்டது. அதுவும் நகரங்களில் குழந்தைகள் பெரும்பாலும் அதீத எடையுடன்தான் காணப்படுகின்றனர். உடல் பருமனாக இருப்பதால் மட்டும் குழந்தைகள் நலமாக இருக்கின்றனர் என்றோ, நாம் குழந்தைகளை நலமாக வளர்த்து வருகிறோம் என்றோ சொல்லிவிட முடியாது. 1995ஆம் ஆண்டுகளுக்கு முன்பு வரை குழந்தைகளை சாப்பிட வைப்பது பெற்றோருக்கு கடினமான வேலையாக இருக்கும். ஆனால் இன்றோ, உணவகங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும் போது, அவர்கள் சாப்பிடுவதை நிறுத்தத்தான் படாதபாடு படவேண்டியுள்ளது. 

 

முன்பெல்லாம்- அதாவது இருபது ஆண்டுகளுக்கு முன் கல்லூரி முதல் ஆண்டு படிக்கும் மாணவர்களின் இடுப்பு சுற்றளவு 28செமீ -30செமீ தான் பெரும்பாலும் இருக்கும். அந்தக் காலத்தில் அதிக வித்தியாச அளவிலான உடைகள் அதே  28செமீ - 30செமீ தான் கிடைக்கும். ஏனெனில் கல்லூரி மாணவர்களின் சராசரி இடுப்பு சுற்றளவும் இதே அளவில் இருந்ததால். ஆனால் இன்றோ, எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் இடுப்பு சுற்றளவே 28செமீ -30செமீ என்றாகிவிட்டது. இந்த அதீத எடைக்கு என்ன காரணம்? 

1. உணவுமுறை மாற்றம் 
2. உடற்பயிற்சியின்மை 

உணவுமுறைகளைப் பற்றி மட்டும் இந்தக் கட்டுரையில் காண்போம். 

 

Vazi

 

கடைகளில் உணவு வாங்கி உண்பதை அவமானமாகக் கருதிய கிராமங்களில் கூட, இப்போதெல்லாம் வாரத்திற்கு நான்கு வேளை கடைகளில் வாங்கிச் சாப்பிடும் வழக்கம் வந்துவிட்டது. அதுவும் குறிப்பாக புரோட்டா, பிராய்லர் சிக்கன். அதுவும் இவை இரவு நேரங்களில் தான் கிடைக்கின்றன என்பது பெரிய கொடுமை. புரோட்டா  என்பது கோதுமையின் இறுதி கழிவான மைதாவினால் செய்யப்படுவது. இரண்டாம் உலகப்போரின் போது வந்த உணவுப்பஞ்சத்தை தவிர்க்க  மைதாவை உணவாக உட்கொள்ளும் வழக்கம் வந்தது. அதுவரை கோதுமை கழிவாக குப்பையில் கொட்டப்பட்டது  இந்த மைதா. இதை  ஒரு பழைய பாடலில், "ஒரு ஜாண் வயிறு  இல்லாட்டா,  இந்த  உலகத்திலேது கலாட்டா - உணவுப் பஞ்சமே வராட்டா - நம்ம உசுர  வாங்குமா புரோட்டா" என்று ஒரு கவிஞர் பாடியிருப்பார். இன்றும் மைதாமாவு தான், சுவரொட்டிகள் ஒட்டப்பயன்படும் பசை தயாரிக்க உதவுகிறது. இப்படிப்பட்ட மைதாவால் செய்யப்படும் புரோட்டா, குழந்தைகளின் குடல்களில் ஒட்டிக்கொள்கிறது. விரைவாக வெளியேறுவதில்லை. இதனால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் உள்ளிட்ட பல பிரச்சனைகள் வருகின்றன.  

 

​Vazi

 

அடுத்து பிராய்லர் சிக்கன். 1990களில் சில மருத்துவர்களால் அதிகம் கொழுப்பு இல்லாத உணவு, புரத சத்து அதிகம் உள்ள உணவு என்று மக்களிடம் மெதுமெதுவாகச் சேர்க்கப்பட்ட இந்த பிராய்லர் இன்று தவிர்க்க முடியாத உணவாக மாறி நிற்கிறது. கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.. வீட்டில் நாம் வளர்க்கும் நாட்டுக்கோழி ஒரு கிலோ எடையை அடைய ஓர் ஆண்டுக்கு மேல் ஆகிறது. ஆனால், பிராய்லர் கோழி 40 நாட்களில் 4 கிலோ எடையில் வளர்கிறது என்றால் அதற்கு என்ன உணவு கொடுக்கப்படுகிறது? ஒரு வேளை steroid எனப்படும் ஊக்கமருந்து கொடுத்து வளர்க்கப்படுகிறதென்றால், அது எவ்வளவு கொடிய விளைவுகளை பிராய்லர் கோழிகளை உட்கொள்ளும் நம் பிள்ளைகளுக்கு ஏற்படுத்தும்? சிலவேளைகளில் தவிர்க்கமுடியாமல் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் வெறும் 6 கிராம் ஸ்டீராய்டை பரிந்துரைக்கும் போது, அதன் கூடவே குடல் புண் ஏற்படாமலும், எலும்பு சேதம் ஏற்படாமல் இருக்கவும் சில கூடுதல் மருந்துகளையும் மிகக் கவனமாக பரிந்துரைக்கின்றனர்.

 

Vazi

 

இப்படியிருக்க, நாம் கிலோக்கணக்கில் கோழிக்கறியை உட்கொள்ளும்போது உடலுக்குள் போகும் அதீத அளவிலான ஸ்டீராய்டுகள் எத்தனை பாதிப்புகளை ஏற்படுத்துமென்று சிந்தியுங்கள். பிராய்லர் கறியின் தீங்கை அறிய, அந்தக் கறிக்கடையின் முன் வரும் நாயை உற்று கவனித்தால் போதும். அக்கடையின் கழிவுகளையும் மிச்சங்களையும் உண்டு வளரும் அந்த நாய்கள் மிகவும் பருமனாகவும், மலடாகவும், அவற்றின் கண்கள் புரையோடிப்போயும் இருக்கும். 


இவைபோக, பாதுகாக்கப்பட்ட, செறிவூட்டப்பட்ட, சுவையூட்டப்பட்ட, மணமூட்டப்பட்ட மற்றும் பொட்டலங்களில் அடைத்து வைக்கப்பட்ட உணவுகளும் குழந்தைகளின் உடலுக்கு நல்லதல்ல. பாலிதீன் பைகளில் வாங்கிவரப்படும் சூடான உணவுகள் அனைவரின் உடல் நலத்துக்கும் கேடு- குறிப்பாக குழந்தைகளுக்கு. அவை குறித்தும் அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.


குழந்தைகளின் உணவுமுறையை மாற்றாமல் நாம் குழந்தைகளை பாதுகாக்க இயலாது. எனவே கீழ்க்காணும் வழிமுறைகளை அவசியம் நடைமுறைப்படுத்த வேண்டும். 

 

1.  சரியான நேரத்தில் சரிவிகித மற்றும் கலப்பு உணவு கொடுத்தல் 

2. மாடித் தோட்டம், வீட்டு முற்றத்தோட்டம் ஆகியவை மூலம் இயற்கைவழி முறையில் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை நாமே பயிர்செய்தல். (குறைந்தபட்சம் குழந்தைகளுக்காவது கொடுக்கும் அளவு)  

3. ஒரே தெருவில் வசிக்கும் அல்லது ஒரே இடத்தில் பணிபுரியும் மக்கள் சேர்ந்து இயற்கைவழி பயிரிட்டால் வாயிலாக காய்கறிகள், பழங்களை உற்பத்தி செய்வது.

4. கூடுமானவரை கடைகளில் உணவருந்துவதை தவிர்ப்பது. 

இவையே குழந்தைகள் நலமாக வாழ வழி புரியும் காரணிகள். 


குழந்தைகளின் படிப்பில் எடுத்துக்கொள்ளும் அக்கறையை விட, அவர்களின் உடல் நலத்தில் அதிக அக்கறை செலுத்துவதே முக்கியம். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய இயலும்? 

குழந்தைகளுக்கான உடற்பயிற்சி குறித்தும், நெகிழிசார் பொருட்களின் தீங்கு குறித்தும் அடுத்த பாகத்தில் விரிவாக விவரிப்போம். 

Next Story

'நடமாடும் கருக்கலைப்பு மையமா?' - பெண் உட்பட 4 பேரிடம் விசாரணை

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
nn

கடலூரில் நடமாடும் கருக்கலைப்பு மையம் செயல்பட்டதாகப் புகார் எழுந்த நிலையில், இது தொடர்பாகப் போலீசார் 4 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் ஏற்கனவே சட்ட விரோதமாகக் கருக்கலைப்புகளில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த கழுதூர் என்ற கிராமத்தில் நடமாடும் வகையில் கருக்கலைப்பு மையம் செயல்பட்டதாக புகார்கள் எழுந்தன. அந்தப் பகுதியில் உள்ள ஓம் சக்தி மெடிக்கலில் கருவில், இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என ஸ்கேன் மூலம் சட்ட விரோதமாகத் தெரியப்படுத்தப்படுவதாகவும் கருக்கலைப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது.

உடனடியாக வேப்பூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அகிலன் மற்றும் காவல்துறையினர் அந்த மெடிக்கலுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் ஸ்கேன் செய்ய பயன்படுத்தப்படும் கருவி மற்றும் கருக்கலைப்புக்கு பயன்படுத்திய மருந்துகள் ஆகியவை இருந்தன. மெடிக்கலின் உரிமையாளரான மணிவண்ணன் மற்றும் அந்த மெடிக்கலில் மருந்தாளுநராக பணிபுரிந்த கௌதமி, இடைத்தரகர்கள் தினேஷ், கண்ணதாசன் ஆகிய நான்கு பேரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இவர்கள், சம்பந்தப்பட்ட நபர்கள் வீட்டுக்கே சென்று கருக்கலைப்பில் ஈடுபட்டதாகப் புகார்கள் எழுந்த நிலையில், நடமாடும் வகையில் கருக்கலைப்பு மையம் செயல்பட்டதா என்பது தொடர்பாக விசாரணை தீவிரமடைந்துள்ளது.

Next Story

'நரம்பியல் மருத்துவர்களின்றி தவிக்கும் பொதுமக்கள்'- குறைகளை கொட்டித்தீர்த்த நகர்மன்ற உறுப்பினர் 

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
'Public suffering without neurologists' - city councilor vents grievances

சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் நகர்மன்றத் துணைத் தலைவர் முத்துக்குமரன், நகராட்சி பொறியாளர் மகாராஜன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். இதில் மூத்த நகர்மன்ற உறுப்பினர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், ரமேஷ், வெங்கடேசன், அப்பு சந்திரசேகர், மக்கின்,ஜெயச்சித்ரா, தஸ்லீமா,புகழேந்தி, கல்பனா உள்ளிட்ட அனைத்து நகர்மன்ற உறுப்பினர்கள் அவர்களின் வார்டுகளில் உள்ள குறைகள் மற்றும் நகர்மன்ற தலைவரின் முயற்சியால் செய்த பணிகள் குறித்து பேசினார்கள்.

இதில் காங்கிரஸ் நகர்மன்ற உறுப்பினர் தில்லை மக்கீன் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய மற்றும் நரம்பியல் மருத்துவர்கள் இல்லை. இருதயம் மற்றும் நரம்பியல் நோய் பாதிக்கப்பட்டவர்களை சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு அழைத்து செல்ல முடியாத நிலையில் பல்வேறு தரப்பு ஏழை மக்கள் உயிரை காப்பாற்ற முடியாமல்  இருப்பதாகவும் பேசினார்.  மேலும் அவர்களின் குடும்பத்தில் ஒருவர் சமீபத்தில் இருதய மருத்துவர் இல்லாததால் இறந்ததை சுட்டிக்காட்டினார். உடனடியாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதயம் மற்றும் நரம்பியல் மருத்துவரை நியமித்து போதிய சிகிச்சை ஏற்பாடு செய்ய வேண்டும் என பல நகர் மன்ற உறுப்பினர்கள் பேசினார்கள்.

இதற்கு நகர்மன்ற தலைவர் உடனடியாக அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று இருதயம் மற்றும் நரம்பியல் மருத்துவரை நியமிக்கவும், உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். இதனை அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களும் வரவேற்றனர். இதனை தொடர்ந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சமீபத்தில் நடைபெற்ற நடராஜர் கோவில் ஆருத்ரா தேர் மற்றும் தரிசன விழாவின் போது நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செயல்பட்டதற்கு அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களும் நகராட்சி நிர்வாகத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர்.