Skip to main content

டென்ஷன், ஸ்ட்ரெஸ், டிப்ரெஷன்..

Published on 11/02/2018 | Edited on 11/02/2018

அலுவலகப் பணியில் இருப்பவர்களில் பத்திற்கு ஒன்பது பேர் ஏதேனும் ஒரு வகை மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று சொல்கிறது. உலக சுகாதார நிறுவனம் இந்த ஆண்டின் 'உலக  மனநல தின'த்தை  (அக்டோபர் 10) 'பணியிட மனநல பாதுகாப்பு'க்கான நாளாக அறிவித்துள்ளது.    இப்பொழுதெல்லாம் சிறு வாண்டுகளிலிருந்து எல்லோரும், எந்தவிதமான வித்தியாசமும் இல்லாமல் சொல்கிற வார்த்தைகள், 'டென்ஷன், ஸ்ட்ரெஸ், டிப்ரெஷன்'. வேலைக்கு செல்பவருக்கு உயர் அதிகாரி தொல்லை, அவருக்கு அவர் மேலதிகாரி தொல்லை, அவருக்கு முதலாளி தொல்லை, முதலாளிக்கு நேரத்துக்கு பொருள் போகாதது, விற்பனை குறைவு, நஷ்டம் போன்ற தொல்லைகள். மாணவனுக்கு படிக்கும் சுமை, பணம் இல்லாதவனுக்கு பணம் சேர்ப்பதில் ஏற்படும் மனஉளைச்சல், பணம் அதிகமாக இருப்பவனுக்கு பாதுகாப்பதில் மனஉளைச்சல், பிரபலமாகதவனுக்கு ஏன் ஆகவில்லை என உளைச்சல், பிரபலமானவனுக்கு நிம்மதியாக வெளிய போகக்கூட முடியலேயே என்று மனஉளைச்சல். ஆக இங்கு மனஉளைச்சல், மனஅழுத்தம்  எனும் மனநோய் இல்லாத ஆளே கிடையாது. 

depression

 

விதவிதமான இந்த மன உளைச்சல்களுக்கு அடிப்படையாக இருப்பது, வேகமாக ஓடும் உலகத்துக்கு ஈடாக ஓட வேண்டுமென்ற மனம் தான். நாம் வாழும்  தகவல் தொழில்நுட்ப வாழ்வில், தகவல்கள் நம்மைத் துரத்திக்கொண்டு படுக்கை வரை வருகின்றன. அளவுக்கு அதிகமான செய்திகள் ஏற்படுத்தும் தாக்கமும், அதற்கு எதிர்வினையாக நம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லையே என்ற எண்ணமும், செயலாக அல்லாமல் 'கமெண்ட்களாக'ப் பேசி வடிகால் தேடும் தன்மையும் பல புதிய  விதமான மனஅழுத்தங்களையும் நோய்களையும் உண்டாக்குகின்றனவாம்.     

மனநோய் என்றால் தனியாக பேசுவது, தனியாக சிரிப்பது, அதிகமாக பயப்படுவது, அதிகமாக சந்தேகப்படுவது போன்றவைகள் மட்டுமல்ல. சராசரி நிலையிலும், அதிகம் கோபப்படுவது, 'யார் வீட்டிற்கு வந்தாலென்ன, போனாலென்ன, நாம் நம் வேலையை மட்டும் பார்ப்போம்' என்று இருப்பது போன்றவைகளும்தான். இதற்கெல்லாம்  மிக, மிக முக்கியமான காரணம்  பொறுமையின்மைதான். அப்படி பொறுமையில்லாமல் இருப்பதற்கு காரணமாக இருப்பது தொழில்நுட்ப சாதனங்களே. நான் இதைப்பற்றி சொல்லவேண்டும் என்றாலும் அதற்கு தொழில்நுட்ப சாதனம் தேவைப்படுகிறது என்பது உண்மைதான். ஆனால் சரியாகப் பயன்படுத்தாவிட்டால், அவை ஏற்படுத்தும் தீமைகளே அதிகமாக இருக்கின்றன.  

depression 2

 

நம் முன்னோர்கள் ஒரு தகவலுக்காக உலகையே சுற்ற வேண்டுமானாலும் தயாராய் இருந்தார்கள், ஆனால் நாம் உலகையே உள்ளங்கையில் அடக்கிவிட்டு, வேண்டியவைகளை உடனே பெற்றுவிடுகிறோம். கைப்பேசி விளையாட்டுகளில் கூட நமக்கு தோல்வியை ஏற்றுக்கொள்ளும் தைரியமோ, பொறுமையோ இருப்பதில்லை. முன்பெல்லாம் ஒரு கடிதம் எழுதிவிட்டு பதிலுக்காக வாரக்கணக்கில், மாதக்கணக்கில் காத்திருந்தனர். ஆனால் இப்போது வாட்ஸ்அப்பில் மெசேஜ் ப்ளூடிக்(message blue tick) ஆன பத்து நொடிகள் கூட பொறுக்கமுடியவில்லை. 

நம்மில் எத்தனை பேர் தினமும் நிலவு, நட்சத்திரம் போன்றவைகளை பார்க்கிறோம் கடிவாளம் கட்டிவிட்ட குதிரையைப்போல தானே தினமும் இருக்கிறோம். நாலா பக்கமும் விரிந்திருக்கிறது உலகம், ஆனால் நாம் அதை நான்கு சுவற்றுக்குள்ளும், சொல்லப்போனால் கைபேசித் திரையின் நான்கு பக்கத்திற்குள் அடக்கிவிட்டோம். இந்த வாழ்க்கைமுறை நம் சிந்தனைத் திறனையும் பாதித்திருக்கிறது.  ஒரு மனிதனின் மூளை ஒரு நிமிடத்தில் 50 விதமான சிந்தனைகளை சிந்திக்கும். நாம் இன்று ஒரு மணிநேரம் ஆனாலும் ஒரே விஷயத்தை பார்த்துக்கொண்டிருக்கிறோம். இத்தகைய அழுத்தங்களைக் கையாள சில சின்ன விஷயங்களைச் செய்யலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்...

depression 3

 

- வாரத்தில் ஒரு நாளேனும் மெய்நிகர் உலகான கைபேசி, சமூக வலைதளம், கணினி ஆகியவற்றை ஒதுக்கிவிட்டு மெய்யான உலகில் உரையாடுங்கள் 

- நல்ல நகைச்சுவைக் காட்சிகளைப் பார்த்து சிரியுங்கள். நல்ல நண்பரிடம் நகைச்சுவையாக, கொண்டாட்டமாக பேசிக்களியுங்கள்

- வருடத்திற்கு ஓரிருமுறை ஊர் சுற்றுங்கள். செல்லும் இடத்தில், இத்தனை ஸ்பாட்களைப் பார்த்தே ஆகவேண்டுமென்ற கட்டாயத்தில் செல்லாமல், ஆசுவாசமாக இருங்கள் 

- நன்றாக சோம்பல் முறித்து கொட்டாவி விடுவது மனதைப் புத்துணர்ச்சியாக்குமாம். இந்த பழக்கம் மட்டும்  அலுவலகத்தில் செய்வதற்கு உகந்ததல்ல 

- அனைத்தையும் விட, யாரோடும் உங்களை ஒப்பிட்டுக் கொள்ளாதீர்கள் 

சின்னச் சின்ன மாற்றங்களால், மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வோம். மன நலம், வாழ்க்கையின் வளம்!      

 

 

Next Story

கரோனா பயத்தில் மகனைவிட்டு விலகிய பெற்றோர்!!! நோய் இல்லாதவரை மனநோயாளி ஆக்குவதா?

Published on 11/07/2020 | Edited on 11/07/2020

 

corona

 

வெளிநாட்டிலிருந்து மிகுந்த சிரமப்பட்டு, சொந்த ஊர் திரும்பிய நபரை ‘தனிமைப்படுத்தல்’ என்ற பெயரில் அவரது குடுமத்தினர் தனித்துவிட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

‘நாம் நோயுடன் போராட வேண்டும், நோயாளியுடன் அல்ல’ என்பதை மறந்து மக்கள் நோயின் அச்சத்தால் நோயாளியுடன் போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நோய் இல்லாத ஒருவருடன் போராடுவது அதனினும் கொடுமையான மன நோய்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

 

முன்பெல்லாம் வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்று சில ஆண்டுகள் அங்கே தங்கியிருப்பவர்கள் அங்கிருந்து கடிதம் எழுதுவார்கள். அந்த கடிதத்தை காணும் பெற்றோர் உறவினர்கள் முகம் மலர்ந்துபோகும். தங்கள் மகனை உறவினர்களை நேரில் பார்ப்பது போன்று அந்த கடிதத்தை திருப்பி, திருப்பி பார்ப்பார்கள். அதை பிரித்து படிக்கும்போது, அவர்களிடம் நேரடியாக பேசுவது போன்ற உணர்வு ஏற்படும். 

 

கால மாற்றத்தால் செல்போன்கள் வந்த பிறகு அதன் மூலம் பேசி சந்தோசமடைந்தார்கள். அதன்பிறகு வீடியோ காலில் முகத்தை பார்த்து பேச ஆரம்பித்தார்கள். சில ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாடுகளிலிருந்து அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு வரும் தகவலைச் சொன்னதும், பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும் தலைகால் புரியாது. அவர்கள் வந்தவுடன் அவர்களுக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க சொல்வது, கோழி அறுத்து, ஆடு வெட்டி சமைத்து, வயிறுமுட்ட சாப்பிடச் சொல்வது என்று தடபுடலாக வரவேற்பார்கள். உறவினர் வீடுகளுக்கு செல்லும்போது அரசாங்க அதிகாரியை, அமைச்சரை வரவேற்பது போன்று வரவேற்று உபசரிப்பார்கள்.

 

வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தாய் தந்தை உறவினர்கள் பாசத்தில் திக்குமுக்காடிப் போவார்கள். விடுமுறை முடிந்து அவர்கள் மீண்டும் வெளிநாடு போகும்போது பெற்றோர்கள் உற்றார், உறவினர்கள் திரண்டு சென்று மீண்டும் எப்போது வருவாய் என்று கண்ணீர் மல்க வழியனுப்பி வைப்பார்கள். அப்படிப்பட்ட பாசம், நேசம், ஆசை, அன்பு, பண்பு எல்லாம் இப்போது காணாமல் போய்விட்டது. காரணம் - கரோனா.

 

வழக்கமாக வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் பெற்றோரின் பாசத்தில் திக்குமுக்காடிப் போவார்கள். ஆனால் இந்தக் கரோனாவால் பாசம், நேசம், ஆசை, அன்பு, பண்பு போன்றவை எல்லாம் இப்போது காணாமல் போய்விட்டன. காரணம், இந்தக் கரோனா, மக்களை அவ்வளவு பாதித்திருக்கிறது.

 

கடலூர் அருகே உள்ள குண்டு உப்பலவாடி பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரின் 25 வயது மகன், துபாய்க்கு சென்று வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது கரோனா பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் இருக்கும் தமிழர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி கொண்டிருக்கிறார்கள். இவரும் துபாயிலிருந்து சொந்த ஊர் திரும்ப மிகவும் சிரமப்பட்டுள்ளார்.

 

ஒரு வழியாக விமான டிக்கெட் கிடைத்து அங்கேயே அவருக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டு, கரோனா நோய் இல்லை என்று தெரிந்த பிறகுதான் ஊர் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளார். இப்படி பல்வேறு சிக்கல்களில் இருந்து விமானம் மூலம் துபாயில் இருந்து கேரளாவுக்கு வந்து, அங்கிருந்து வாடகை கார் மூலம் தனது வீட்டிற்கு வந்துள்ளார். தமது பெற்றோர்கள் ஆசையோடு எதிர்பார்த்து காத்திருப்பார்கள் என்று எண்ணத்தோடும், பெரும் எதிர்பார்ப்போடும் வந்தவருக்கு பெருத்த ஏமாற்றமும், மன அழுத்தமுமே கிடைத்துள்ளது..

 

வெளிநாட்டிலிருந்து அவர் வந்த உடனேயே அவரது பெற்றோர், சகோதரிகள், தாத்தா, பாட்டி ஆகியோர் கரோனா அச்சத்தின் காரணமாக வீட்டிலிருந்து வெளியேறி விட்டனர். அவர்கள் வீட்டை விட்டு போகும்போது அந்த இளைஞரிடம், 'நீ மட்டும் வீட்டில் இரு, உனக்கு தேவையான சாப்பாட்டை அனுப்பி வைக்கிறோம். தற்போது கரோனா அச்சம் காரணமாக 15 நாட்கள் தனித்து இருக்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது, எனவே அதன் பிறகு பார்த்துக்கொள்ளலாம். இப்போது நாங்கள் அனைவரும் உறவினர் வீட்டுக்கு சென்று தங்கிக்கொள்கிறோம்', என்று கூறிவிட்டு இளைஞரிடம் இருந்து எந்த பதிலையும் எதிர்பார்க்காமல் விறுவிறுவென்று வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.

 

உலகம் முழுவதும் கரோனா காலத்தின் தனிமையாலும், உறவுகளிடையே ஏற்பட்ட இடைவெளியாலும் பலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கரோனா தனிமைப்படுத்தல் என்பதற்கும், அரண்டு ஓடுவதற்கும் இடையிலான வேற்பாட்டை சிலர் புரிந்துகொள்ளவில்லை. அரசு 'நாம் நோயுடன் போராட வேண்டும்; நோயாளியுடன் அல்ல' என்று ஒவ்வொரு அலைபேசி அழைப்பின் முன்னும் விழிப்புணர்வு வழங்குகிறது. ஆனால் அந்த செய்தி மக்களுக்கு சரியாக போய் சேரவில்லை. மக்கள் நோயே இல்லாத ஒருவருடன் போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இங்கு விசித்திரமானது.

 

நோய் பரவல், சிகிச்சை, சிலர் சிகிச்சை பலனின்றி மரணம், தனிமைப்படுத்தல் என்று இந்த கரோனா காலம் சராசரி மனிதர்களை பெற்ற பிள்ளைகளைக்கூட புறக்கணிக்க வைத்து விட்டது. உயிர் பயம் உறவுகளைப் பிரித்துள்ளது.

 

இந்த பெற்றோர் மேற்கொண்டுள்ள தனிமைப்படுத்தல் நடைமுறையைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அதனை அந்த இளைஞரிடம் பக்குவமாக பேசி எதிர்கொள்ளாமல் அவர் வந்தவுடன் வீட்டைவிட்டு ஓட்டமெடுத்தது, ஏற்கனவே மன ரீதியாக நொந்து ஊர் திரும்பிய அந்த இளைஞரை இன்னும் பாதிப்புக்குள்ளாக்கும். கரோனாவை விடக் கொடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

 

மக்கள் தனிமைப்படுத்தலுக்கும், தனிமையில் விடுவதற்குமான வேறுபாடுகளை உணர்ந்து, அரசு சொல்வதுபோல நோயாளியுடன் போராடுவதைத் தவிர்க்க வேண்டும். நோயே இல்லாதவரிடம் போராடி அவரை மனநோயாளி ஆக்குவது தவிர்க்கப்பட வேண்டும். மன நோய்கள் பற்றிய புரிதலையும் அதன் நீண்டகால விளைவுகளையும் தெளிவுபடுத்தி, அரசும் விழிப்புணர்வு வழங்கவேண்டும்.

 

 

Next Story

’’உயிர் இருந்தால் வருகிறோம் ஊருக்கு!’’-மன உளைச்சலில் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் 

Published on 15/04/2020 | Edited on 15/04/2020

கரோனா பாதிப்பால் உலகமே அஞ்சி வரும் நிலையில், வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் தாய் நாட்டுக்கு திரும்ப முடியாமல் அவதியுறுகின்றனர். இந்தியா திரும்பிய வெளிநாடுவாழ் இந்தியர்களும், அவர்களது வீட்டில் உள்ள யாரும் வெளியே வரக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அவர்களது வீடுகளில் முழு விவரம் அடங்கிய நோட்டீசும் ஒட்டப்பட்டுள்ளது.

  d


இவ்வாறாக தனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்தினரை ஆங்காங்கே கிராம மக்கள், நகர மக்கள் கேலியாக பேசுவதும், புறக்கணிப்பதும் அவதூறாக வாட்ஸ் ஆப், முகநூலிலும் கருத்துகளை பரப்புவதும் கடுமையான மனஉளைச்சலை ஏற்படுத்தி வருவதாக வெளிநாட்டிலிருந்து அண்மையில் திரும்பியவர்கள் கூறுகின்றனர். எனவே அரசு உடனடியாக வெளிநாட்டில் வாழக்கூடிய இந்தியர்கள் அனைவருக்கும், கரோனா நோய்தொற்று காரணமாக பாதிப்படைந்த மற்றும் பாதிப்படைந்து விடுவோமா என்ற அச்சத்தில் உள்ள அனைவருக்கும் உளவியல் மருத்துவர்களைக் கொண்டு மன அழுத்தத்தை போக்கும் வகையில் சிகிச்சை அளிக்கவும், இந்திய தூதரகம் மூலம் அனைத்து நாடுகளிலும் வாழும் இந்தியர்களுக்கு பயிற்சி வழங்கவும் நடவடிக்கை எடுத்து இந்தியர்களை காக்க வேண்டியது அரசின் பொறுப்பு என்பதனையும் நினைவூட்டுகிறோம். 
 

nakkheeran appமேலும் அன்றாடம் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் நிலை குறித்து அவர்களின் பெற்றோர்கள், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் கரோனா தொற்று குறித்து வரும் செய்திகளை அறிந்து மிகுந்த கவலையுற்றுள்ளனர். மேலும் மருத்துவர்களும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கும் மேலும் அச்சம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. எனவே பாதிக்கப்பட்ட கரோனா நோயாளிகள் வார்டுகளிலும், தனிமைப்படுத்தப்பட்ட மக்கள் உள்ள இடங்களிலும், மருத்துவ சேவையாற்றும் செவிலியர்கள், மருத்துவப் பணியில் தொடர்ந்து பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கும் உளவியல் சார்ந்த ஆலோசனைகளை கட்டாயமாக வழங்க வேண்டிய தேவை உள்ளது. 

கரோனா இருக்கலாம் என சந்தேகப்பட்டு தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சம்பவங்களும் அண்மையில் அரங்கேறியுள்ளது. உதாரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு இளைஞன் தற்கொலை செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் கேரளாவிலிருந்து திரும்பிய ஒருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இந்நிலையில்  வெளிநாட்டில் பிழைப்புக்காக குடும்பச் சூழல் காரணமாக வேலைக்கு சென்ற இளைஞர்கள் சிலர், தங்களது எண்ணத்தை முகநூல் வழியாக பதிவிட்டுள்ள செய்தி படிப்பவர்களின் நெஞ்சை கணக்கச் செய்து வருகின்றது. இதோ அந்த இளைஞர்கள் மனம் வெதும்பி மனம் நொந்து பதிவிட்டுள்ள செய்தி "உயிர் இருந்தால் வருகிறோம் ஊருக்கு! இல்லாமல் போனால் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்! அடுத்த தலைமுறையை வெளிநாடுகளுக்கு அனுப்பமாட்டோம்! என்று..... வெளிநாட்டு இளைஞர்கள்" என்று பதிவிட்டுள்ளது மிகுந்த வேதனைக்குரிய மிகுந்த கவனிக்கத் தக்கது.

அவர்களுக்கு தக்க உளவியல் ரீதியான ஆலோசனை வழங்குவதோடு அவர்களுக்கு முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அத்தியாவசிய பொருட்களை வாங்ககூட வெளிநாட்டில் வாழும் இந்தியர்களை முககவசம் இல்லாமல் வெளியில் வர கடுமை காட்டி வருகிறார்கள் என வெளிநாட்டில் வாழும் இளைஞர்கள் தெரிவிக்கின்றனர். எனவே அவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதை இந்திய தூதரகம் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து சமூக ஆர்வலர்கள் சார்பாக அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.