Skip to main content

குழந்தையின்மைக்கு இந்த முத்திரை தீர்வா? - சித்த முத்திரை மருத்துவர் சாலை ஜெய கல்பனா விளக்கம்!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Infertility - dr salai jaya kalpana Mudra 

குழந்தையின்மை, பிசிஓடி போன்ற பிரச்சனைகளுக்கு முத்திரைகளின் மூலம் தீர்வு காண முடியும் என சித்த முத்திரை மருத்துவர் சாலை ஜெய கல்பனா விளக்கம் அளிக்கிறார்.

பி.சி.ஓ.எஸ் என்று சொல்லக்கூடியது 'பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்ரோம்'. பொதுவாக சின்ரோம் என்று சொன்னால் நிறைய குறைபாடுகளை கொண்டிருக்கும். ஹார்மோன்ஸ் சரியின்மை, குழந்தை கருத்தரித்தலில் பிரச்சனை, முகத்தில் முடி முளைத்தல்,  தூக்கமின்மை, மாதவிலக்கு முறையின்மை என்று பல குறைபாடுகளை சேர்த்துச் சொல்வது. இந்த பிரச்சனைக்கு பிராண முத்திரை, அபான முத்திரை செய்யலாம். 

அபான முத்திரையை வெறும் வயிற்றில் கட்டை விரல் நுனியுடன், சுண்டு விரல் மற்றும் மோதிர விரலின் நுனியை சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். மற்ற இரு விரல்கள் நீட்டி உள்ளங்கை மேல் நோக்கி இருக்க வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வரும்போது, குழந்தையின்மை, காரணம் இல்லாமல் குழந்தைப்பேறு தள்ளிப் போவது, பி.சி.ஓ.டி தொந்தரவு, குறிப்பாக கருப்பை குழாயில் அடைப்பு இருந்து அதற்கு தொடர்ந்து சிகிச்சை எடுத்தும் பலன் இல்லாமல் இருப்பவர்கள் மூன்று மாதம் செய்யும்போது கண்டிப்பாக தீர்வு காணலாம். 

Mudra

நிறைய பேர் சினைமுட்டை வெளிவந்து அது முதிர்ச்சி அடைய மாற்றி மாற்றி ஹார்மோனல் ஊசி போட்டுக் கொள்வர். அப்படி இருக்கும்போது, இந்த முத்திரையை செய்வதன் மூலம் மட்டுமே இயற்கையாக அந்த சூழல் உடலில் நடக்கும். கழிவு நீக்க முத்திரையில் ஆரம்பித்து, பஞ்சபூத முத்திரையில் சமப்படுத்தி, தசவாயுக்களில் இருக்கும் ஐந்து வாயுக்களுக்கான முத்திரையில் இருக்கும் பிராண முத்திரை, அபான முத்திரைகளை செய்து வரும்போது முழுமையாக இந்த பி.சி.ஓ.டி, குழந்தையின்மை போன்ற தொந்தரவுகளுக்கு  தீர்வு காணலாம்.

அடுத்து பெண்களுக்கு, பி.சி.ஓ.டி க்கு நிகராக இருந்து வருவது தைராய்டு பிரச்சனை. இதில் குறிப்பாக ஹைபோ தைராய்டுக்கு முதல் அறிகுறியாக மாதவிலக்கு பிரச்சனை. ஏற்கனவே பி.சி.ஓ.டி இருப்பவர்குளுக்கு எடை அதிகரிப்பு, உடல் சோர்வு, மனச் சோர்வு, தோல் வறட்சி, தலை முடி வறட்சியாக காணப்படும். இதற்கெல்லாம் சூரிய முத்திரை நல்ல தீர்வு கொடுக்கும். மோதிர விரலை மடக்கி கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் அழுத்த வேண்டும். மத்த விரல்கள் நீட்டி இருக்க வேண்டும். இதை இரண்டு கைகளிலும், இரண்டு வேளையிலும் 10 முதல் 20 நிமிடம் வரை செய்யவேண்டும். உடல் வெப்பம் அதிகம் இருப்பவர்களும், தொந்தரவு இல்லாதவர்களும், வெப்ப மண்டலங்களில் வசிப்பவர்களும், கோடை காலத்திலும் செய்யக்கூடாது. மேலும் செய்யும்போது நீர்க்கடுப்பு வந்தாலோ, கல்லடைப்பு பிரச்சனை ஏற்கனவே இருந்து எடுத்தவர்களோ, அதற்கான அறிகுறி தென்பட்டாலோ உடனடியாக இந்த முத்திரையை விட்டு விட வேண்டும். செய்து முடித்தவுடன் கண்டிப்பாக தண்ணீர் பருக வேண்டும். இதிலே குரல் தொந்தரவும் இருப்பவர்கள் சங்கு முத்திரை செய்து வரலாம்.   

முத்ரா

ஒரு கை உள்ளங்கையில் மற்றொரு கையின் கட்டை விரலை வைத்து மற்ற விரல்களால் கட்டை விரலை மூடிவிட்டு, மீதி நான்கு விரல்களின் நுனியை கட்டை விரலின் நுனி மீது தொட வேண்டும். இந்த முத்திரை சங்கு வடிவம் போல் இருக்கும். சங்கின் தன்மை, சங்கின் நாதம், சங்கின் ஒலி இவை அனைத்தும் நம் உடலின் நரம்பு மண்டலங்களை சுத்திகரிக்கும் தன்மை இதற்கு உண்டு. குரலை சார்ந்து இருக்கும் பேச்சாளர்கள், ஆசிரியர்கள், பாடகர்கள், தைராய்டு நோயினால் ஏற்பட்டிருக்கும் குரல் தொந்தரவுக்கு இந்த முத்திரை கொண்டு நிச்சயமாக தீர்வு காணலாம். மேலும் இதன் மூலமாக பாசிட்டிவ் எனெர்ஜியை நன்கு பெறலாம்.