பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் கோவிலில் உள்ள அம்மன் சிலையைச் சேதப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஜீவன் பீமாநகர் பகுதியில் லட்சுமி புவனேஷ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 14 ஆம் தேதி இரவு பூஜை முடித்த்துவிட்டு பூசாரி கோவிலை பூட்டிவிட்டுச் சென்றிருக்கிறார். மறுநாள் காலையில் பூசாரி வந்து கோவிலைத் திறந்தபோது அம்மன் சிலை சேதம் அடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கோவிலில் உள்ள சிசிடிவியை ஆய்வு செய்த போது சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் அம்மன் சிலை மீது கற்களைக் கொண்டு வீசி 3 முறை தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, நடந்த சம்பவம் தொடர்பாக மாநகர் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில், அம்மன் சிலையை சேதப்படுத்தியது 10 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து சிறுவனை பிடித்து போலீசார் விசாரித்தபோது, பத்தாம் வகுப்பு படித்து வரும் சிறுவன் புவனேஷ்வரி அம்மன் மீது அதீத பக்தி கொண்டவராக இருந்துள்ளார். 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று அம்மனுக்கு நேர்த்திக் கடன் அனைத்து செய்துள்ளார். ஆனால் 3 முறையும் 10 ஆம் வகுப்புத் தேர்வில் சிறுவன் தோல்வி அடைந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் லட்சுமி புவனேஷ்வரி அம்மன் சிலையின் மீது கற்களை வீசி சேதப்படுத்தியதை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து செய்த தவறுக்கு சிறுவன் மன்னிப்பு கோரியதால் போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.