மருத்துவக் கல்லூரியின் ஆசிரியர், மாணவர் ஒருவரை முடிதிருத்தும் கடைக்கு அழைத்துச் சென்று மொட்டை போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவர், ஸ்டைலாக தலைமுடியை வெட்டிக்கொண்டு கல்லூரிக்கு வந்துள்ளார். இதனை கண்ட கல்லூரி விடுதியில் உள்ள சில சீனியர் மாணவர்கள், அந்த மாணவரின் சிகை அலங்காரம் சரியில்லை என்றும், தலைமுடியை சீராக வெட்டி கல்லூரிக்கு செல்லும்படி கூறியுள்ளார்கள்.
அதன்படி, அந்த மாணவரும் தலைமுடியை ட்ரிம் செய்து கல்லூரிக்கு வந்துள்ளார். இதனையடுத்து, விடுதியில் தங்கியிருக்கும் ராக்கிங் தடுப்புக் குழுவின் மருத்துவ அதிகாரியான உதவி பேராசிரியர் ஒருவர், இது வித்தியாசமாக இருக்கிறது என்று கூறி, அந்த மாணவரை சலூனுக்கு அழைத்துச் சென்று தலையில் மொட்டை அடிக்க செய்துள்ளார். மருத்துவ மாணவரை, உதவி பேராசிரியர் ஒருவர் மொட்டை அடிக்க செய்த விவகாரம் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. இந்த விவகாரம் கல்லூரி முதல்வரின் கவனத்திற்கு வந்ததையடுத்து, மருத்துவ அதிகாரியான உதவி பேராசிரியரை விடுதியில் இருந்து அகற்ற உத்தவிட்டார். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.