சென்னையில் நடைபெற்ற 16வது நிதிக்குழு கூட்டம் இன்று (18.11.2024) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். இக்கூட்டத்தில், 16வது நிதிக் குழுவின் தலைவர் அரவிந்த் பனகாரியா, நிதிக் குழுவின் உறுப்பினர்களான அஜய் நாராயண் ஜா, அன்னி ஜார்ஜ் மேத்யு, மனோஜ் பாண்டா மற்றும் தமிழக அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றுகையில், “தமிழ்நாடு சந்தித்து வரும் மூன்று குறிப்பிடத்தக்க சவால்களை நிதிக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். கடந்த சில ஆண்டுகளாக, இயற்கைப் பேரிடர்களின் தாக்கத்தினால் தமிழ்நாடு பெரும் பேரிழவினை சந்தித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு புயல்கள் மற்றும் இடைவிடாத மழைப்பொழிவு மற்றும் வெள்ளத்தினால் பொதுமக்களின் உயிர், உடைமை மற்றும் வாழ்வாதாரம் மட்டுமின்றி மாநிலத்தின் கட்டமைப்பு வசதிகளும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகின்றன.
இயற்கைப் பேரிழிவுகளினால் ஏற்படும் இழப்புகளை சரிசெய்வதற்கு பெரும் அளவிலான நிதி மாநில அரசால் செலவிடப்பட வேண்டிய தேவை உள்ளதால், வழக்கமான வளர்ச்சித் திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே இத்தகைய பேரிடர் துயர் தணிப்பு பணி மற்றும் மறு சீரமைப்பு நடவடிக்கைகளை மாநிலங்கள் உடனுக்குடன் மேற்கொள்ளும் வகையில் உரிய நிதியை வழங்கிட நிதிக்குழு பரிந்துரைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். அடுத்து, தமிழ்நாட்டில் அதிகமாக வளர்ந்துவரும் முதியவர்களின் எண்ணிக்கை மற்றும் இதன்காரணமாக மாநில மக்கள் தொகை அமைப்பில் ஏற்படும் மாற்றம் குறித்தும் நிதிக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவர விழைகிறேன். தற்போது தமிழ்நாட்டின் மக்கள் தொகையின் சராசரி வயது 36.4 ஆண்டுகள். இது உத்திரப்பிரதேச மாநிலத்தின் சராசரி அளவை விட 9.5 ஆண்டுகள் அதிகம். 16வது நிதிக்குழுவின் பரிந்துரைக் காலம் முடிவடையும் பொழுது தமிழ்நாட்டின் சராசரி வயதானது 38.5 ஆண்டுகளாக இருக்கும். அதன்படி, நாட்டிலேயே வயதானவர்கள் அதிகம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உருவெடுக்கும்.
தமிழ்நாடு இதுவரை பெற்று வந்துள்ள மக்கள்தொகை அடிப்படையிலான பயன் வேகமாகக் குறைந்து வருவதையும் சமூகப் பாதுகாப்புத் தேவைகள் அதிகரித்து வருவதையும் இது பிரதிபலிக்கிறது. அதிகரித்து வரும் முதியவர்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கு எதிர்வரும் பத்து ஆண்டுகளில் தமிழ்நாடு, தேவையான பொருளாதார வளர்ச்சியினை அடைவதுடன் பல்வேறு துறைகளில் அதிக முதலீடுகளை உடனடியாக செய்ய வேண்டியுள்ளது. அந்த முயற்சியை மேற்கொள்ளாவிடில் முன்னேறிய மாநிலமாக மாறுவதற்கு முன்னால், முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக தமிழ்நாடு மாறிவிடும் அபாயத்தை இன்று சந்தித்து வருகிறது. இந்த மிக முக்கியமான கருத்தை நிதிக்குழு கவனத்தில் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்வதுடன், இந்த சமூக முதலீடுகளுக்கு தேவையான நிதி ஆதாரத்தையும் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
மூன்றாவதாக, நாட்டிலேயே அதிக நகரமயமாக்கலைச் சந்தித்து வரும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. நகர்ப்புர கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதும், அதற்கான நிதி ஆதாரங்களை பெருக்குவதும் தமிழ்நாடு சந்தித்து வரும் ஒரு மிக முக்கியமான சவால்களில் ஒன்றாக இருக்கிறது. குறைவான நில வளம் மற்றும் நீர் வளம் ஒருபுறம், தொடர்ந்து அதிகரித்து வரும் மக்கள் தொகை மறுபுறம் இவற்றுக்கு இடையே சென்னை போன்ற நகரங்களில் வாழ்ந்திடும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம், சாலை வசதி மற்றும் தெரு விளக்குகள் அமைத்திடத் தேவையான முதலீடுகளைச் செய்திடவும் உள்ளாட்சி அமைப்புகளின் தரமான சேவைகளைத் தொடர்ந்து வழங்கிடவும், நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அளவிலான நிதி மற்றும் மானியங்களை வழங்கிட நிதிக்குழு பரிந்துரை செய்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
மாநிலங்களின் செலவினங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகமாக உயர்ந்து வரும் வேளையில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) முறை நடைமுறைக்கு வந்த பின்னர் மாநில அரசுகள் தங்களுக்கு தேவையான நிதி ஆதாரங்களைப் பெருக்குவதில் பல தடைகளை சந்தித்து வருகின்றன. இதனால் மத்திய அரசின் நிதிப்பகிர்வை மாநிலங்கள் மிகவும் சார்ந்திருக்கக் கூடிய இன்றைய காலகட்டத்தில் 16வது நிதிக்குழுவின் பங்கும், அதன் பரிந்துரைகளும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. 16வது நிதிக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் பணிவுடன் சொல்லிக் கொள்வதெல்லாம் தமிழ்நாட்டின் 8 கோடி மக்களும் இந்த நிதிக்குழுவின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள்.
மாநிலங்களின் வளர்ச்சியை உறுதி செய்வதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை அடைந்திடும் நோக்கில் இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தும் ஒரு அரியவாய்ப்பை காலம் நமக்கு வழங்கி இருக்கிறது. இதைக் கருத்திற்கொண்டு 16வது நிதிக்குழு உரிய பரிந்துரைகளை வழங்கும் என்று நான் நம்புகிறேன். தமிழ்நாடு அரசின் சார்பாக நிதிக்குழுவின் பரிசீலனைக்கு வழங்கப்பட இருக்கும் விரிவான அறிக்கையினை கவனத்துடன் பரிசீலித்து, கடந்த காலங்களில் பல்வேறு நிதிக்குழுக்களின் பரிந்துரைகளினால் தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு உரிய தீர்வை 16வது நிதிக்குழு வழங்கும் என்று உறுதியாக நம்புகிறோம்.
சமச்சீரான வாய்ப்புகளை வழங்கும் முற்போக்கான அணுகுமுறையின் மூலமாகவே இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தின் உண்மையான நோக்கத்தை அடைந்திட இயலும் என்பது எங்களுடைய திடமான நம்பிக்கை. ஒவ்வொரு மாநிலமும் அவற்றின் முழு திறனுக்கு ஏற்றவகையில் வளர்ச்சியை எட்டுவதன் மூலமாகவே இந்தியத் திருநாட்டை உலக அரங்கில் பொருளாதார வலிமை கொண்ட ஒரு மாபெரும் நாடாக நிலைநிறுத்த முடியும் என்று நான் நம்புகிறேன்” எனப் பேசினார்.