இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடும் இந்த தினத்தில் உலகம் முழுவதும் நீரிழிவு தினம் அனுசரிக்கப்படுகிறது. கடந்த 24 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 40 கோடி பேர் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு, வேகமாக வளரும் நோயாக இது மாறி வருகிறது. உணவு பழக்கம், சரியான உடற்பயிற்சியின்மை ஆகிய காரணங்களால் சர்க்கரை வியாதி வருவதாக நாம் இவ்வளவு நாள் நினைத்திருந்தோம். ஆனால் தற்பொழுது காற்றின் முலமாக கூட இது உருவாவதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஆம், காற்றின் மாசு வேகமாக அதிகரித்து வரும் இந்த நிலையில், காற்றில் கலந்துள்ள மாசு காரணமாகவும் சர்க்கரை நோய் ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. p.m 2.5 எனும் மிக நுண்ணிய வகை மாசுதான் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. மிக நுண்ணிய மாசான இது நாம் சுவாசிக்கும் போது நம் நுரையீரலுக்குள் சென்று நம் ரத்தத்துடன் கலக்கிறது. இதனால் இதயம், சிறுநீரகம் மற்றும் கணையமும் பாதிக்கப்படுகிறது. இதனால் கணையம் இன்சுலினை சுரக்கும் தன்மையை மெதுவாக இழந்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதாக கூறப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் இதனை சுவாசிக்கும் போது, அவர்கள் குழந்தைகளுக்கும் வருங்காலத்தில் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறதாம். உடலில் உள்ள இந்த மாதிரியான மாசுகளை அகற்ற, வைட்டமின் சி மற்றும் ஒமேகா 3 சத்துக்கள் உள்ள உணவை அதிகளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.
இதனை தடுப்பதற்கான வழியாக ஆராய்ச்சியாளர்கள் கூறும் ஒரே வழி மாசினை கட்டுப்படுத்துவதே ஆகும். ஏற்கனவே மாசினால் பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வரும் நிலையில், தற்போழுது இதில் சர்க்கரை வியாதியும் சேர்ந்துள்ளது மாசு சார்ந்த பிரச்சனைகளின் வீரியத்தை அதிகரிப்பதாக உள்ளது. இதற்கு பிறகாவது சுற்றுசூழலை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை பற்றி நாம் தீவிரமாக யோசிக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.