சென்ற 'வழியெல்லாம் வாழ்வோம்' பாகத்தில் 'மெக்காலே கல்விமுறை' பற்றி பார்த்தோம். இந்த வாரம் சில பிற கல்விமுறையில் குறித்து விவாதிக்கலாம்.
மாண்டிசோரி கல்விமுறை:
இத்தாலியில் பிறந்த மருத்துவர் மரியா மாண்டிசோரி என்பவரால் உருவாக்கப்பட்ட கல்விமுறை இது. குழந்தைகளின் ஆளுமை வளர்வதற்கு ஏதுவாய் இக்கல்வி முறை இருப்பதாக சில ஆசிரியர்கள் கூறுகின்றனர். குறிப்பாக ஆரம்பக் கல்விக்கு இந்த மாண்டிசோரி முறை மிகவும் உதவுவதாக கல்வியியல் அறிஞர்கள் கூறுகின்றனர். குழந்தைகள் அவர்களுக்கே உரித்தான வேகத்தில் பாடங்களைக் கற்றுக்கொள்ள மாண்டிசோரி முறை வழிவகை செய்கிறது. மூன்று மாதத்தில் சில குறிப்பிட்ட பாடங்களைக் கற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்று குழந்தைகளைக் கட்டாயப்படுத்தாத இக்கல்விமுறை மெக்காலே கல்விமுறையைவிட ஓரளவு சிறப்பானதாய் உள்ளது. முதலில் அடிப்படைகளை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து, பின் தெரியாதவற்றை அவர்களாகவே கற்றுக்கொள்ள வழிவகை செய்யும் வழிமுறை இது. From Known to Unknown என்பதே மாண்டிசோரி கல்விமுறையின் குறிக்கோள் என்று சொல்லப்படுகிறது. இப்படி பிரிட்டிஸ்காரர்களும், இத்தாலியர்களும் உருவாக்கிய கல்விமுறையிலேயே காலம் தள்ளிக் கொண்டிருக்கிறோம் நாம்.
ஏன் இல்லை இந்தியத்துக்கென்று ஒரு கல்வி முறை?
உலகின் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட மக்களாட்சி நாடு என்று பெருமை பேசும் இந்த இந்தியத்துக்கென்று, இன்றுவரை எந்தக் கல்விமுறையும் உருவாக்கப்படாதது ஏன்? இது யார் பிழை? மகாபாரத காலத்திலேயே செயற்கைக்கோள் இருந்ததாய் ஊடகங்களின் முன் தம்பட்டம் அடிக்கும் அமைச்சர்களைக் கொண்ட ஒரு நாட்டில் தனக்கென ஒரு கல்விமுறையை உருவாக்குவதில் என்ன சிக்கல், யாரால் உருவாகிறது?
குருகுலக்கல்வி:
குருகுலக்கல்வி என்று முன்பு ஒரு கல்விமுறை வழக்கத்தில் இருந்தது. குருவின் இல்லத்தில் தங்கி மாணவர்கள் கல்வி கற்கும் முறை. Boarding School போல. குருவே வார்டன். அவர் சொல்லிக் கொடுக்கும் பாடங்கள் அறிவுக்கும் வாழ்வியலுக்கும் தொழிலுக்கும் சேர்ந்தே பயன்படும் வண்ணம் இருந்ததாகத் தெரிகிறது. இன்று பல்கலைக்கழகங்கள் Choice Based Credit System எனப்படும் ஒரு முறையை அறிமுகப்படுத்திவருகின்றன. அதாவது, மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த பாடங்களை தெரிவு செய்துகொண்டு, அவற்றைப் பயின்று அதில் நிபுணத்துவம் பெறும் முறை இது. இந்த முறையில் பல வகையான பல புலங்களைச் சேர்ந்த பாடங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டு மாணவர்களுக்கு கொடுக்கப்படும். அவற்றுள் தங்களுக்குப் பிடித்த பாடத்தை மாணவர்கள் தெரிவுசெய்து அவற்றை படித்து அதில் தேர்வு எழுதலாம்.
இன்று பல்கலைக்கழகங்கள் கொண்டு வந்துள்ள இந்த முறையின் வேர்கள் முன்பே குருகுலக்கல்வியில் இருந்திருக்க வேண்டும் என்பது எண்ணம். அப்போதே இப்படி ஒரு கல்வியியல் முறை இருந்தது உண்மையெனில், இன்று வெறும் பழம்பெருமை பேசுவதோடு நில்லாமல் ஏன் இந்த அரசுகள் இந்நாட்டு மாணவர்களுக்கென்று ஒரு தனித்துவமான கல்வியியல் முறையை உருவாக்கவில்லை என்பது ஒவ்வொரு சாமானியனின் மனதிலும் எழும் கேள்வி. ஆனால், குருகுலக்கல்வி பிறப்பு ரீதியாகவே இருந்தது என்பது வருந்தத்தக்க விடயம்.
மேலும், பள்ளிக்கல்வி சரியாக இருந்தால் மட்டுமே கல்லூரிக்கல்வி சிறப்பாய் அமையும். இவை இரண்டும் சரியாக இருக்கும்போது மட்டுமே ஒரு நாட்டின் சிறந்த குடிமகன்கள் உருவாக்க முடியும். இங்கோ, முதல் கோணல் முற்றும் கோணல் கதை தான். ஆரம்பிக்க கல்வியிலே A for Apple என்பதில் சுருங்கிப் போகிறது குழந்தைகளின் உலகம்.
பின்லாந்து கல்விமுறை:
இன்று உலக நாடுகளில் ஆரம்பக் கல்வியில் முதலிடத்தை வகிக்கும் நாடு பின்லாந்து. அங்கு குழந்தைகள் 7 வயதில்தான் பள்ளிக்கே செல்கின்றனர். ஏனெனில், ஏழு வயதில்தான் குழந்தைகளின் மூளை சிலவற்றை உள்வாங்கத் தயாராகும். இங்கு நாம் மூன்று வயதில் குழந்தைகளின் கையில் பென்சில் கொடுத்து எழுதப் பழக்கும்போது குழந்தைகளின் விரல்கள்கூட எழுதுவதற்கு தயாரானதாய் இருப்பதில்லை. பின்லாந்தில் கல்வி ஒரு விளையாட்டைப் போல் தான் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது. முதல் ஆறு வருடங்கள் குழந்தைகளுக்கு எந்த தேர்வும் வீட்டுப்பாடமும் கிடையாது. பதினாறு வயதில்தான் குழந்தைகள் தேர்வுகளுக்குத் தயார்படுத்தப்படுகின்றனர்.
பின்லாந்து கல்வியியல் முறையில் இருக்கும் சிறப்பம்சங்கள்:
1. முதல் ஆறு வருடங்கள் ஒரே ஆசிரியரிடம் குழந்தைகள் பாடம் கற்கும். அதனால் குழந்தைகளின் நிறைகுறைகளை அந்த ஆசிரியர் சரியாக மதிப்பீடு செய்து அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தமுடியும்.
2. வெறும் நான்கு மணிநேரம் மட்டுமே வகுப்புகள். ஒரு வகுப்புக்கும் அடுத்த வகுப்புக்கும் இடையே ஒரு மணி நேர இடைவெளி. இந்த இடைவெளி, குழந்தைகளின் மூளையை ஒரு பாடத்திலிருந்து இன்னொரு பாடத்தைக் கற்க ஆயத்தமாக்கத் தேவையான இடைவெளியாகும்.
3. வாழ்வியல் சார்ந்த கல்வியியல்: இதில் அன்றாட வேலைகளான துணி துவைத்தல், மடித்தல், சமையல் போன்றவை கூட குழந்தைகளுக்கு கற்றுத்தரப்படுகின்றன.
4. படைப்பாற்றலும் இணைந்து செயல்பட வழிவகுக்கும் Team Work போன்றவற்றிக்கு முக்கியத்துவம்.
5. அனைத்திற்கும் மேலாய் அனைத்து பள்ளிக்கூடங்களும் அரசு நடத்தும் பள்ளிக்கூடங்கள். இதனால் லாபநோக்கில் தனியார்மயமாக்கப்படுவது மொத்தமாய் இல்லை அங்கே.
இதெல்லாம் இங்கு சாத்தியமா என்று தெரியவில்லை. ஆனால் இதையெல்லாம் தாண்டி நம் பிள்ளைகளை எப்படி உடலாலும் மனதாலும் வலிமையாக்கி நெறிப்படுத்தலாம் என்று அடுத்த வாரம் காண்போம்.