இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 10 நாட்களாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவிற்கு நீர், மின்சாரம் உள்ளிட்டவற்றை இஸ்ரேல் நிறுத்தி வைத்துள்ளது.
இதனிடையே காசாவை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் அங்கு மின்சாரம், உணவு குடிநீர் உள்ளிட்டவற்றைத் துண்டித்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்திருக்கும் இஸ்ரேலிய பிணையக்கைதிகளை விடுவிக்கும் வரை காசாவிற்கு மின்சாரம் கிடையாது என இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து தனது பீரங்கி குண்டுகளாக காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கி கொண்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் காசாவை சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹமாஸ் படையினர் உயிரிழப்பதை விட அப்பாவி பாலஸ்தீன மக்கள் அதிகளவில் உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது. அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஈரான் உள்ளிட்ட நாடுகள் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதனைத் தொடர்ந்து, சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், “இஸ்ரேலில் கொடூர தாக்குதல் நடத்திய ஹமாஸ் பயங்கரவாதிகள் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும். ஆனால், அதே நேரத்தில் பாலஸ்தீன மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமிக்கக் கூடாது என்று கூறியிருந்தார்.
இந்த சூழலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேலுக்கு செல்லவிருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், “இஸ்ரேலுடன் அமெரிக்காவின் ஒற்றுமையை அதிபர் ஜோ பைடன் மீண்டும் உறுதிப்படுத்துவார். ஹமாஸ் படையினர் பிடித்து வைத்திருக்கும் பிணயக்கைதிகளை விடுவிக்கவும் அவர் முயற்சி செய்வார்” என்று கூறினார்.