அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இருவரும் சிங்கப்பூரில் உள்ள செண்டோசா தீவில் ஒரு ஹோட்டலில் இன்று காலை சந்தித்தனர். அவர்கள் இருவரும் தனியாக 45 நிமிடங்கள் ட்ரான்ஸ்லேட்டரின் உதவியுடன் பேசியதாகவும் தெரிவித்தனர். இரு நாட்டு முக்கிய மந்திரிகள், அதிகாரிகளுடனும் நேருக்கு நேராக சந்திப்புநடந்தது. பின்னர் இரு அதிபர்களும் ஆவணத்தில் கையெழுத்திட்டனர்.
ஒப்பந்தங்கள் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட பொழுது டொனால்ட் ட்ரம்ப், 'இதைப் பற்றி உணவு இடைவேளை முடிந்து சொல்கிறேன்' என்று சொன்னார். கிம், 'இனி மாற்றத்தை உணர்வீர்கள்' என்று கூறினார். பத்திரிகையாளர் ஒருவர் ட்ரம்பிடம், 'நீங்கள் கிம்மை அமெரிக்காவுக்கு அழைப்பீர்களா?' என்று கேட்க, ட்ரம்ப் உடனடியாக 'கண்டிப்பாக அழைப்பேன்' என்றார். இது போன்று எதிர்பாராத பல திருப்பங்கள் அங்கு நடந்தேறிக்கொண்டிருந்தது.
பின்னர் பத்திரிகையாளர்கள் கையெழுத்திடப்பட்ட ஆவணத்தைப் பற்றிக் கேட்டதற்கு ட்ரம்ப் கோப்புகளைத் தூக்கி காட்டினார். புகைப்பட கலைஞர்களும் அதை படம் பிடித்தனர். அதை பெரிதாக்கிப் பார்த்ததில், இரு நாடுகளும் நட்புறவு வைத்துக்கொள்ள போவதாகவும் மற்றும் ஒன்றாக இணைந்து அணு ஆயுத சக்திக்கு எதிராக செயல்படப் போவதாகவும் அதில் இருக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம் தென் கொரியாவுடன் போடப்பட்ட ஒப்பந்தம் போன்றதுதான் இது. இதனால் கொரிய தீபகற்பம் தற்போது அணு ஆயுத சோதனைகள் அல்லாத பகுதியாக மாற இருக்கிறது. அணு ஆயுத ஆராய்ச்சியை இவ்விரு நாடுகளும் ஒன்றிணைந்து கைகோர்த்துக்கொண்டு இனி துடைத்து எரியப்போவதாக அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.