பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட உள்ள நிலையில், பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கும் வேலைகளில் இறங்கியுள்ளது சவுதி அரேபியா.
சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்ததில் இருந்து, பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். பெண்களுக்கு வாகானம் ஓட்டும் உரிமை, விளையாட்டு மைதானங்கள் மற்றும் திரையரங்குகள் செல்லும் உரிமை உள்ளிட்ட அவரது முன்னெடுப்புகள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளனர்.
உலகிலேயே சவுதி அரேபியா நாட்டில் மட்டும்தான் பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமை மறுக்கப்பட்டு உள்ளது. அதற்காக பல ஆண்டுகளாக போராடிய பெண்களும் கடுமையான தண்டனைகளை அனுபவித்துள்ளனர். இந்நிலையில், அதன்மீதான தடை நீக்கப்பட்டு, இன்னும் மூன்று வாரங்களில் பெண்கள் வாகனங்கள் ஓட்டுவதற்கான சட்டரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதற்கட்டமாக 10 பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கியுள்ளது அந்நாட்டு அரசு. இந்தப் பெண்கள் சர்வதேச அளவில் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில தினங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த உரிமை கோரிய பெண்கள் இன்னமும் தண்டனைக் கட்டுப்பாட்டுக்குள் இருப்பது குறிப்பிடத்தக்கது.