துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் ஹசன் பிட்மெஸ் (53). இவர், அந்த நாட்டிலுள்ள இஸ்லாமிய ஃபெசிலிட்டி கட்சியில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினராகப் பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 12 ஆம் தேதி அன்று நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அதில், இஸ்ரேலுடனான துருக்கி ஆளும் கட்சியின் உறவை விமர்சித்துப் பேசிக்கொண்டிருந்தார்.
சுமார் 20 நிமிடங்கள் தொடர்ந்து பேசிய அவர், திடீரென்று மயங்கிக் கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்ட அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதறினர். அதன் பின்பு, உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் பிட்மெஸுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளித்தும் அவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்” என்று கூறினர். நாடாளுமன்றத்தில் அவர் தனது கடைசி உரையாக “வரலாற்றிலிருந்து தப்பித்தாலும், கடவுளின் கோபத்தில் இருந்து தப்பிக்க முடியாது” என்று துருக்கி ஆளுங்கட்சியையும் இஸ்ரேலையும் விமர்சித்துப் பேசி தனது உரையை நிறைவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.