
கனடாவில் அடுத்த ஆண்டு அக்டோபரில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தகைய சூழலில் தான் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு பல முனைகளில் இருந்து நெருக்கடி அதிகரித்துக் கொண்டிருந்தது. இதற்கிடையில், அமெரிக்கா அதிபரான டொனால்ட் டிரம்ப் கனடாவை அமெரிக்காவுடன் இணைப்போம் என்ற ரீதியில் பேசி ஜஸ்டின் ட்ரூடோவிற்கு சிக்கலை ஏற்படுத்தினார். அதே சமயம், ஜஸ்டின் ட்ரூடோவை பதவியில் இருந்து கவிழ்க்க நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக முக்கிய கூட்டணிக் கட்சி தெரிவித்திருந்தது.
ட்ரூடோ கட்சியின் முக்கிய கூட்டணிக் கட்சியான தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங், மக்களுக்கு பணியாற்றுவதில் ட்ரூடோ தோல்வியுற்றதாகவும், அவரது அரசு மீது வரும் ஜனவரி மாதம் 27ஆம் தேதி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால், நாடு முழுவதும் ஆதரவு நிலை சரிந்து வந்ததால், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரதமர் பதவியிலிருந்தும் லிபரல் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
இந்த நிலையில், லிபரல் கட்சியின் தலைவராகவும், கனடா பிரதமராகவும் மார்க் கார்னி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இங்கிலாந்து மற்றும் கனடா மத்திய வங்கியின் முன்னாள் தலைவராக இருந்த மார்க் கார்னி, கனடாவின் 24வது பிரதமராக பதவியேற்கிறார். நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற மார்க் கார்னி பேசியதாவது, “கனடா நாட்டு மக்களின் நீர், நிலம் மற்றும் வளங்களை அமெரிக்கா விரும்புகிறது. ஒருவேளை அவர்கள் இதில் வெற்றி பெற்றுவிட்டால், நமது வாழ்க்கை முறையையே அவர்கள் அழித்துவிடுவார்கள். கனடா ஒரு போதும் எந்த வகையிலும், எந்த வடிவத்திலும் அமெரிக்காவின் பகுதி ஆகாது. வாழ்க்கையின் மகிழ்ச்சி, கலாச்சாரம் மற்றும் பிரஞ்ச் மொழி ஆகியவை நமது அடையாளத்தின் ஒரு பகுதியாகும். அதை நாம் பாதுகாக்க வேண்டும்; அதை நாம் ஊக்குவிக்க வேண்டும்.
எந்தவொரு வர்த்தக ஒப்பந்தத்திற்கும் அதை நாம் வர்த்தகம் செய்யமாட்டோம். டொனால்ட் டிரம்ப் எடுத்துச் செல்வதை விட, கனடா மக்கள் தங்களுக்குள் அதிகமாக கொடுப்பார்கள். இதற்கு அசாதாரண முயற்சிகள் தேவைப்படும். இது வழக்கம் போல் நடக்கும் வர்த்தகம் போல் இருக்காது. நாம் முன்பு கற்பனை செய்து பார்க்காத விஷயங்களை, சாத்தியமில்லை என்று நாம் நினைக்கும் வேகத்தில் செய்ய வேண்டியிருக்கும். ஒவ்வொரு கனடா மக்களும் பயனடையும் வகையில் பொது நன்மைக்காக அதைச் செய்வோம்” என்று தெரிவித்தார்.
கனடாவில் இந்தாண்டு அக்டோபர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த இடைப்பட்ட காலம் வரை மார்க் கார்னி கனடா பிரதமராக நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.