கார்கள் இல்லாத, கார்பன் டை ஆக்ஸைட் வெளியேற்றமில்லாத பசுமை நகரத்தை உருவாக்கப் போவதாகச் சவுதி அறிவித்துள்ளது.
உலகின் கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்களின் முதன்மை நாடுகளில் ஒன்றான சவுதி, சுற்றுச்சூழல் மேம்பாட்டு நடவடிக்கையாக கார்பன் வெளியேற்றமில்லாத நகரைக் கட்டமைக்க உள்ளது. செங்கடலை ஒட்டிய சவுதியின் பாலைவனப் பகுதியில் 50 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்கள் செலவில், ‘நியோம்’ என்ற பெயரில் இந்த நவீன நகரத்தை சவுதி உருவாக்க உள்ளது. இதற்கான அறிவிப்பை சவுதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியிட்ட நிலையில், தற்போது இதற்கான திட்டவரைவு வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக 'நியோம்' நகர இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "மொத்தம் 170 கி.மீ. நீளத்துக்கு 10 லட்சம் பேர் வசிக்கக் கூடியதாக இந்த நகரம் இருக்கும். இயற்கையை 95 சதவீதம் பாதுகாக்கக் கூடியதாக இருக்கும். இந்நகரில் கார்கள், தெருக்கள் இருக்காது. கார்பன் வாயுக்கள் வெளியேற்றமும் இருக்காது. பள்ளிகள், சுகாதார மையங்கள், பசுமை வெளிகள், அதிவேகப் போக்குவரத்து என அனைத்து வசதிகளும் கொண்டதாக இந்த நகரம் இருக்கும். எவ்வித தேவைக்கும் ஒருவர் 20 நிமிடங்களுக்கு மேல் நடக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்நகரில் செயற்கை நுண்ணறிவு முக்கியப் பங்கு வகிக்கும். இங்கு வசிப்பவர்களுக்கு 100 சதவீதம் தூய்மையான எரிசக்தி, மாசுபாடு இல்லாத, சுகாதாரமான சுற்றுச்சூழல் ஏற்படுத்தப்படும். இதற்கான கட்டுமானப் பணிகள் பொது முதலீட்டு நிதியில் இருந்து இந்த ஆண்டின் முதல் காலாண்டில் தொடங்கும். 3,80,000 வேலைவாய்ப்புகளை இத்திட்டம் உருவாக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.