உலகளவில் கரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4623 ஆக உயர்ந்துள்ள சூழலில் இதனை ஒரு தொற்று நோய் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
சீனாவில் வூகான் மாகாணத்திலிருந்து தொடங்கிய கரோனா வைரசின் தாக்கம் இன்றும் உலகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது. அண்டார்டிகாவைத் தவிர மற்ற அனைத்துக் கண்டங்களிலும் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், சுமார் 100 நாடுகளில் இதன் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடுதல் மூலமாகவும், இருமல் மற்றும் தும்மலின் போது காற்றிலும் பரவக்கூடிய இந்த வைரசைத் தொற்று நோய் என அறிவித்துள்ளது உலக சுகாதார அமைப்பு.
இதுகுறித்து ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் ஜெப்ரேயிசஸ், "கரோனா வைரசை (கோவிட்-19) தொற்று நோய் என வகைப்படுத்த முடியும். இதுபோன்ற நோய்த் தொற்றை இதற்கு முன் பார்த்தது இல்லை. அனைத்து நாடுகளுக்கும் அவசர நடவடிக்கை எடுக்க ஒவ்வொரு நாளும் அழைப்பு விடுத்து வருகிறோம். கரோனா வகை வைரசால் ஏற்படும் முதல் தொற்றுநோய் இதுவாகும்" எனத் தெரிவித்தார். 2009 ஆம் ஆண்டில் எச்1 என்1 "பன்றிக் காய்ச்சல்" க்குப் பிறகு உலக சுகாதார அமைப்பு ஒரு வைரஸ் பாதிப்பைத் தொற்றுநோய் என்று அறிவிப்பது இதுவே முதல் முறை ஆகும்.
தற்போதைய நிலவரப்படி சீனாவில் கரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3169 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உலகளவில் இதுவரை 4623 பேர் இதனால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அதேபோல கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 1,12,000 ஆக அதிகரித்துள்ளது.