சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் இருந்து பரவ ஆரம்பித்து, தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது கரோனா வைரஸ்.
உலகம் முழுவதும் 24 நாடுகளில் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் 40,000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் சூழலில், 910 பேர் இதனால் பலியாகியுள்ளனர். இந்நிலையில், இதனை கட்டுப்படுத்த சீன அரசு தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது.
அந்த வகையில், கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தானாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்பவர்களுக்கு 1000 யுவான் பரிசாக வழங்கப்படும் என்று சீன அரசு தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது இந்திய ருபாய் மதிப்பில் ரூ.10,000 ஆகும். கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள ஹுபே மாகாணத்தில் முதல் முதலாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல் மற்றும் பிற நோய் அறிகுறிகளுடன் வந்து பரிசோதனை செய்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.