Skip to main content

போலி ஏஜன்டுகளால் குவைத் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்

Published on 21/10/2022 | Edited on 21/10/2022

 

Tamils trapped  Kuwait by fake agents
கோப்புப்படம்

 

மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த 35 தமிழர்கள், குடும்ப வறுமை காரணமாக வெளிநாடு சென்று சம்பாதிக்க முடிவெடுத்துள்ளனர். இதனால், மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ஏஜென்சியிடம் வெளிநாட்டு வேலைக்காக ஒன்றரை லட்சம் ரூபாய் வரை பணம் செலுத்தி உள்ளனர். இதனையடுத்து, செப்டம்பர் 4ஆம் தேதியன்று, பணம் செலுத்திய அனைவரும் மதுரையிலிருந்து மும்பைக்கும், மும்பையிலிருந்து குவைத் நாட்டிற்கும் விமானம் மூலம் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

 

குவைத் நாட்டிற்கு வந்த அவர்கள் ஒரு நிறுவனத்தின் கட்டடப் பணிகளை ஒரு வாரம் மட்டுமே செய்துள்ளனர். அதன் பிறகு, ' இனி இங்கே உங்களுக்கு வேலை இல்லை, நீங்கள் வேறு இடத்தில் வேலை பார்த்துக் கொள்ளுங்கள்' என நிறுவனம் கூறியுள்ளது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த 35 தமிழர்கள், அவர்களை குவைத் நாட்டுக்கு அனுப்பிய ஏஜென்சியை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், அந்த ஏஜென்சியால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து தமிழ்நாட்டுக்கு  திரும்புவதற்கு அவர்களிடம் எவ்வித பணமும் இல்லாத நிலையில் 35 தமிழர்களும் குவைத் நாட்டிலேயே சிக்கியுள்ளனர்.

 

அதன் பின்னர் ஒரே அறையில் அனைவரும் உள்ளதாகவும், பத்து நாட்களாக உணவு இல்லாமல் தவித்து வருவதாகவும், அவரவர் குடும்பத்தினரிடம் இந்த தகவலை கூறி கதறி அழுதுள்ளனர்.  இந்த செய்தியை வீடியோ மூலம் குடும்பத்தினரிடம் தெரியப்படுத்தியதை அடுத்து குவைத்தில் சிக்கிய தமிழர்களை மீட்கும்படி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அவரவர் குடும்பத்தினர் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.

 

இந்த செய்தியை ஊடகங்களில் பார்த்த வெளிநாடு வாழ் தமிழர் நலச் சங்கத்தினர் பாதிக்கப்பட்டுள்ள 35 தமிழர்களையும் நேரில் சந்தித்து அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்கினர். அதன் பிறகு, குவைத்தில் சிக்கிய 35 தமிழர்களும் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டது.

 

இதனையடுத்து, குவைத் இந்திய தூதரகத்துடன் வெளிநாடு வாழ் தமிழர் நலச் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் அடிப்படையில்  குவைத்தில் வேலைக்குச் சென்ற 35 தமிழர்களில் 9 தமிழர்கள் விரைவில் தாயகம் திரும்புவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அவர்களிடம் பணம் இல்லாத காரணத்தால் குவைத்துக்கு அனுப்பிய ஏஜென்ட் நிறுவனமே அவர்களுக்கு விமான டிக்கெட் வாங்கி கொடுத்து, வழி அனுப்பி வைத்துள்ளது. மேலும் மீதமுள்ள 26 தமிழர்களும் விரைவில் தாயகம் திரும்புவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. மீதமுள்ள தமிழர்களை, இந்திய தூதரகமும் தமிழக அரசும் விரைந்து மீட்டிட வேண்டும் எனவும் போலி ஏஜன்டுகள் குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வெளிநாடு வாழ் தமிழர் நலச் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மத அரசியல்” - லால் சலாம் படத்திற்கு தடை விதிப்பு

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
lal salaam movie release issue in kuwait

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'லால் சலாம்'. இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிப்ரவரி 9ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.   

இப்படத்தின் டீஸர் கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியானது. அதில் கிரிக்கெட் விளையாட்டில் இரு மதங்களை வைத்துச் செய்யும் அரசியல் குறித்துப் பேசப்பட்டிருப்பதாகத் தெரிந்தது. இதையடுத்து படத்தின் இசை வெளியீட்டு பிரம்மாண்டமாக நடந்தது. அதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “எங்க அப்பாவை சங்கின்னு சொல்றாங்க. அது எனக்குப் பிடிக்கவில்லை. ரஜினிகாந்த் சங்கி கிடையாது” என பேசியிருந்தார். இது சர்ச்சையான நிலையில், ரஜினி, “சங்கி என்பது கெட்ட வார்த்தை என ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவில்லை. அப்பா ஒரு ஆன்மீகவாதி, எல்லா மதத்தையும் விரும்பும் ஒரு நபர், அவரை ஏன் அப்படி சொல்கிறார்கள் என்பது அவருடைய பார்வை” என விளக்கம் அளித்திருந்தார்.  

இதனிடையே இப்படத்தில் 7ஆம் அறிவு, ராஜா ராணி, உள்ளிட்ட சில படங்களில் நடித்த தன்யா பாலகிருஷ்ணன் நடித்துள்ளார். இவர், 2012-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் போது தமிழர்கள் குறித்து பதிவிட்ட ஸ்க்ரீன் ஷாட் ஒன்று பலராலும் பகிரப்பட்டு தமிழர்களை இழிவு படுத்தி கருத்து தெரிவித்த தன்யாவுக்கு எப்படி இப்போது வாய்ப்பு கொடுக்கப்பட்டது என சமூக வலைதளங்களில் கடந்த சில நாள்களாக கடும் விமர்சனம் எழுந்தது. பின்பு அவரே, “தமிழர்களை இழிவு படுத்தும் விதமாக நான் கூறியதாகப் பகிரப்பட்டு வரும் கருத்து நான் கூறியதே அல்ல” என தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோரினார். 

இப்படி சில சர்ச்சைகளில் படம் சிக்கி வந்த நிலையில் இன்னொரு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. குவைத் நாட்டில் இப்படத்தில் விளையாட்டு தொடர்பான மத அரசியல் பேசப்பட்டுவுள்ளதாக தெரிவித்து படத்தை வெளியிட அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

இலங்கையில் குறையும் தமிழர்களின் எண்ணிக்கை; அதிர்ச்சி தரும் புள்ளி விவரம்

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

 Declining number of Tamils ​​in Sri Lanka; The statistics are shocking

 

இலங்கையில் பூர்வீகத் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக புள்ளி விவரங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 

இலங்கையில் தொடர்ச்சியாக நடைபெற்ற இனப் பிரச்சனையால் நேரிட்ட போர், அதன் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள், அதன் காரணமாக ஏற்பட்ட இடம்பெயர்தல் ஆகிய காரணங்களால் அகதிகளாக மக்கள் தொடர்ந்து வெளியேறி வருவதால் அங்குள்ள தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

 

இது இலங்கை அரசு வெளியிட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்களில் தெளிவாகத் தெரிகிறது. கிழக்கு மாகாணத்தில் சிங்களர், இஸ்லாமியர்களுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்திற்கு தமிழ் மக்களின் மக்கள் தொகை இடம்பெற்றுள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

 

இலங்கையில் தமிழர்களை பொறுத்தவரை மூன்று பிரிவுகளாக பார்க்கப்படுகிறது. ஈழத்தமிழர், மலையகத்தமிழர், தமிழ் பேசும் இஸ்லாமியர் என குறிப்பிடப்படும் வகையில் 1881 ஆம் ஆண்டு 24.9 சதவீதமாக இருந்த தமிழர்களின் எண்ணிக்கை 2012-ல் 11.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. திரிகோணமலையில் 1881-ல் 64.8 சதவீதமாக இருந்த தமிழர்களின் எண்ணிக்கை 2012-ல் 32.3 எனப் பாதியாகக் குறைந்துள்ளது. அதேபோல் அம்பாறை மாவட்டத்தில் 1963-ல் 28.8 சதவீதமாக இருந்த தமிழர்கள் எண்ணிக்கை 2012-ல் 17.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.