Skip to main content

இரண்டாம் எலிசபெத் மகாராணி மறைவு; உலகத்தலைவர்கள் இரங்கல் 

Published on 09/09/2022 | Edited on 09/09/2022

 

passed away Elizabeth II; World leaders mourn

 

இங்கிலாந்து ராணி எலிசபெத் உயிரிழந்தார். அவருக்கு வயது 96. மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பிலிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர் என்ற சிறப்பை பெற்றவர் இரண்டாம் எலிசபெத். இவர், கடந்த 1952 முதல் பிரிட்டன் ராணியாக இருந்து வந்தார்.பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப், கடந்த ஆண்டு ஏப்ரல் 9, 2021-ல் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பிரிட்டன் ராணி உயிரிழந்ததால் பல்வேறு உலகத் தலைவர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், எலிசபெத் ஒரு சகாப்தத்தைக் காட்டிலும் மேலானவர் என்று கூறியுள்ளார். அமெரிக்காவில் தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இரண்டாம் எலிசபெத் அவரின் தைரியம் மற்றும் கருணைக்காக உலகம் என்றும் நினைவில் வைத்துக்கொள்ளும் எனக் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, ராணி எலிசபெத் அவர்களின் மறைவு வேதனை அளிப்பதாகக்  குறிப்பிட்டுள்ளார். 

 

பிரிட்டனின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்ற லிஸ் ட்ரஸ் ராணியின் மறைவு பேரிழப்பு எனக் கூறியுள்ளார்.  உலகம் ஒரு ஆளுமையை இழந்து விட்டது என இந்தியக் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 7 தசாப்தங்கள் நீடித்த எலிசபெத் ராணியின் ஆட்சி 15 பிரதமர்கள் மற்றும் நவீன வரலாற்றில் பல திருப்பங்கள் கண்ட எலிசபெத்தின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். நீண்டகாலம் ஆட்சி பீடத்திலிருந்த எலிசபெத் ராணி, தனது நாட்டுக்காகக் கண்ணியத்துடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றினார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

 

ராணி எலிசபெத்தின் உடல் 10 நாட்களுக்குப் பின் நல்லடக்கம் செய்யப்பட இருப்பதாகவும் 5 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் அரங்கில் ராணி எலிசபெத்தின் உடல் வைக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்