இந்தியாவில் இருந்து கனடா சென்று அந்நாட்டு குடியுரிமை பெற்ற ஹரிதீப் சிங் நிஜார், காலிஸ்தான் டைகர் போர்ஸ் தலைவராகவும், சிக்ஸ் பார் ஜஸ்டிஸ் அமைப்பின் கனடா பிரிவின் தலைவராகவும் இருந்துள்ளார். இந்த இரண்டு அமைப்புகளுமே, பிரிவினை தாக்குதலை ஏற்படுத்துவதன் காரணமாக இந்திய அரசால் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கம் ஆகும். இதனையடுத்து, ஹரிதீப் சிங்கை இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக இந்தியா அறிவித்தது. இந்த சூழ்நிலையில், ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஆண்டு ஜூன் 18ஆம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து, கனடா நாட்டு குடிமகனான நிஜாரின் படுகொலைக்கு இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.
அவரது குற்றச்சாட்டிற்கு இந்தியா மறுப்பு தெரிவித்து கடும் கண்டனம் தெரிவித்தது. அந்த வேளையில், கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை கனடாவை விட்டு வெளியேறுமாறு கனடா வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியாவில் உள்ள கனடா தூதரக உயர் அதிகாரியை வெளியேறுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வந்தது.
இதனை தொடர்ந்து, கனடாவிற்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் மற்றும் பிற தூதரக அதிகாரிகள் மீது கனடா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு கடந்த 14ஆம் தேதி புகார் அளித்தது. இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுப்பு தெரிவித்து இந்தியாவில் உள்ள கனடாவின் தூதர் ஸ்டூவர்ட் வீலருக்கு சம்மன் அனுப்பி கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல், இந்திய தூதர் மற்றும் தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றுக்கொள்வதாக தெரிவித்தது. மேலும், இந்தியாவில் உள்ள கனடா தூதர்கள் 6 பேர் வெளியேற்றி, இந்தியா அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதனால், இந்தியா-கனடா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோவுக்கு எதிராக சொந்த கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஜஸ்டீன் ட்ரூடோ இருக்கும் கட்சியான லிபரல் கட்சி எம்.பிக்கள் ரகசிய கூட்டம் நடத்தினர். அந்த கூட்டத்தில் ஜஸ்டீன் ட்ரூடோவும் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவரது கட்சி எம்.பிக்கள் ஒவ்வொருவரும், ஜஸ்டீன் ட்ரூடோ மீது பகிரங்கமாக குற்றச்சாட்டுக்களை வைத்து தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினர். மேலும், ஜஸ்டீன் ட்ரூடோ பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி 24 எம்.பிக்கள் கையெழுத்திட்டு கடிதம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த கடிதத்தில், வரும் அக்டோபர் 28ஆம் தேதிக்குள் ஜஸ்டீன் ட்ரூடோ பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது கனடா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.