அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஏதேனும் வித்தியாசமாக செய்கிறேன் என செய்து அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வகையில், தேசிய கீதம் இசைக்கும் போது, அதற்கு மரியாதை அளிக்காமல் இசை கோர்ப்பவரை போன்று தனது கைகளை அசைத்தது தற்போது சர்ச்சையாகியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை புளோரிடாவில் நடந்த 'சூப்பர் பவுல் 2020' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ட்ரம்ப் அமெரிக்க நாட்டின் தேசிய கீதம் ஒலிக்கும் போது, அதனை அவமதிக்கும் வகையில் கைகளை அசைத்து இசை கோர்ப்பவரை போன்று செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலானதை அடுத்து, இது சர்ச்சையாகியுள்ளது. மெலனியா ட்ரம்ப் உட்பட அங்கிருக்கும் மற்ற அனைவரும் தேசிய கீதத்திற்கு மரியாதையை அளிக்கும் விதமாக நேராக நின்று கொண்டிருக்கும்போது, ட்ரம்ப் மட்டும் கையை அசைத்துக்கொண்டும், தனது நாற்காலியை இழுத்துக்கொண்டும் நின்றுள்ளார். அவரின் இந்த செயலுக்கு அமெரிக்காவின் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.