பெரும்பான்மை நாடுகளில் தற்போது பரவும் கரோனா வைரஸை விட மிகவும் ஆபத்தான புதிய கரோனா வைரஸ் ஒன்று மலேசியாவில் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'D614G' என்னும் புதிய வகை கரோனா வைரஸ் பிறழ்வு அண்மையில் மலேசியாவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்தும், பிலிப்பைன்ஸில் இருந்தும் வந்த இரண்டு நபர்களுக்கு இந்தப் புதிய பரிணாம கரோனா வைரஸ் தொற்றி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் இந்தியாவிலிருந்து சென்ற நபர் மூலம் அந்நாட்டில் 45 பேருக்கு கரோனா தொற்று பரவியது கண்டறியப்பட்ட நிலையில், அந்நபருக்கு அபராதத்தோடு, ஐந்து மாதங்கள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இந்த 45 பேரில் மூன்று பேருக்கு ஆபத்தான வகை கரோனா பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுகாதார இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா, "முன்னர் அமெரிக்காவிலும் ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் காணப்பட்ட இந்தப் பிறழ்வு மிகவும் ஆபத்தானது" எனத் தெரிவித்துள்ளார். அதாவது, இந்தத் துணை வகை கரோனா வைரஸ் மிக எளிதாகத் தொற்றை ஏற்படுத்தி, மற்றவர்களுக்குப் பரவக்கூடியது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஆனால், உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, D614G வகை வைரஸ் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது. இருப்பினும், தங்கள் நாட்டில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மலேசியச் சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.