பொது இடங்களில் இடைவெளி இல்லாமல் நெருக்கமாக நின்றால் சிறை தண்டனை விதிக்கப்படும் என சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஐந்து லட்சத்தைக் கடந்துள்ள சூழலில், இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 24,000 ஐ கடந்துள்ளது. இந்த வைரசின் பரவலைத் தடுக்க உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் பொது இடங்களில் இடைவெளி இல்லாமல் நெருக்கமாக நின்றால் சிறை தண்டனை விதிக்கப்படும் என சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள செய்தியில், மக்கள் பொதுஇடங்களில் வேண்டுமென்றே அருகில் நிற்பது தடை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கொருவர் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளியில் நிற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கரோனாவால் 600க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இதுவரை இரண்டு பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.