மலேசியாவின் புதிய பிரதமராக முஹையதீன் யாசின் பதவியேற்றது சட்டவிரோதமானது என அந்நாட்டின் முன்னாள் முதல்வர் மகாதீர் குற்றம்சாட்டியுள்ளார்.

மலேசியாவில் மகாதீர் முகமது தலைமையிலான அரசு பதவியேற்று இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாக இருந்த சூழலில் கடந்த மாதம் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக மகாவீர் அறிவித்தார். கூட்டணிக் கட்சிகளின் வலியுறுத்தலின் பேரிலும், தனது கட்சியில் நிலவிய அரசியல் காரணமாகவும் அவர் இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது. பெரும்பான்மையை இழந்த மகாதீர், தனது ராஜினாமா கடிதத்தை மலேசியா மன்னரிடம் கொடுத்தச் சூழலில், அவரையே மீண்டும் பிரதமராக பதவியேற்க மலேசிய மன்னர் அழைப்பார் என அவரது ஆதரவாளர்கள் நம்பினர்.
அதே நேரம் அவருடையக் கட்சியை சேர்ந்த மற்றொரு முக்கியத் தலைவரான அன்வர் இம்ராகிம் பிரதமராகப் பதவியேற்கலாம் என தகவல்கள் பரவின. ஆனால் அந்நாட்டு முன்னாள் உள்துறை அமைச்சர் முஹையதீன் யாசின் பிரதமராகப் பதவியேற்க அழைக்கப்பட்டார். இந்நிலையில் மன்னரின் முடிவுக்கு மகாதீர் தலைமையிலான கூட்டணி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. தங்களுக்கு பெரும்பான்மை இருக்கும் நிலையில் முஹையதீன் யாசீனை அழைத்தது சட்டவிரோதமானது எனக் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் விரைவில் நாடாளுமன்றத்தைக் கூட்டி முஹையதீன் யாசினின் பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தப்படும் என மகாதீர் தெரிவித்துள்ளார்.