
3 நாள் சுற்றுப்பயணமாக கடந்த 3ஆம் தேதி தாய்லாந்து சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமரைச் சந்தித்துப் பேசினார். அந்த பேச்சுவார்த்தையில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகக் கூறப்பட்டது. இதனையடுத்து, அங்கு நடைபெற்ற பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் 6வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாட்டை நிறைவு செய்த பிரதமர் மோடி, தாய்லாந்தில் இருந்து நேற்று இரவு இலங்கைக்கு புறப்பட்டார். கொழும்பு விமான நிலையத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அரசு உற்சாக வரவேற்பு அளித்தது. இதையடுத்து, கொழும்பு பகுதியில் பாரம்பரிய முறைப்படி அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று காலை இலங்கை அதிபர் அநுர குமார திஸநாயக்க உடன் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு, எரிசக்தி, டிஜிட்டல் உள்கட்டமைப்பு சுகாதாரம் மற்றும் வர்த்தகத் துறை உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை பயணத்தை முடித்துவிட்டு, அங்கிருந்து நாளை ராமேஸ்வரம் வந்து அங்கு கட்டப்பட்ட புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார்.
இலங்கை ராணுவத்தால் கைதாகும் தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து இலங்கை அரசிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், நீண்டகால பிரச்சனையாக கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மத்திய அரசு மீட்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களைத் தமிழக அரசு சமீபத்தில் நிறைவேற்றியுள்ள நேரத்தில், பிரதமர் மோடி இலங்கைக்கு சென்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.