Skip to main content

டேனிஷ் சித்திக் பலியானதற்கு வருத்தம்... பத்திரிகையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்த தாலிபன்!

Published on 17/07/2021 | Edited on 17/07/2021

 

danish siddiqui

 

இந்தியாவைச் சேர்ந்த புகைப்பட ஊடகவியலாளர் டேனிஷ் சித்திக், ராய்ட்டர்ஸ் செய்தி முகமையில் பணியாற்றிவந்தார். தற்போது ஆப்கானிஸ்தானில் தாலிபன் தீவிரவாதிகள், தொடர் தாக்குதல் நடத்தி அந்த நாட்டின் பல பகுதிகளைக் கைப்பற்றிவரும் நிலையில், டேனிஷ் சித்திக் ஆப்கான் இராணுவத்துடன் இணைந்து தங்கி இராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்குமிடையேயான மோதல்களைப் பதிவுசெய்துவந்தார்.

 

இந்தநிலையில் அவர், தாலிபன் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியாகியுள்ளார். ரோஹிங்கியா அகதிகளின் இன்னல்களை ஆவணப்படுத்தியதற்காக ஊடக உலகின் மிக உயரிய விருதான புலிட்சர் விருதினை வென்றுள்ள டேனிஷ் சித்திக், இந்தியாவில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு, ஹாங்காங் போராட்டங்கள், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக டெல்லியில் ஏற்பட்ட கலவரம் உள்ளிட்ட நிகழ்வுகளில் எடுத்த புகைப்படங்களும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

 

டேனிஷ் சித்திக் மறைவுக்குப் பல்வேறு தரப்பினரும் பத்திரிகையாளர்களும் தங்களது இரங்கலையும், அவர் கொல்லப்பட்டதற்கு கண்டனத்தையும் தெரிவித்துவருகின்றனர். இந்தநிலையில், டேனிஷ் சித்திக்கின் மறைவிற்கு தாலிபன் வருத்தம் தெரிவித்துள்ளது. தாலிபன் தீவிரவாதிகளின் செய்தி தொடர்பாளர் ஸபியுல்லா முஜாஹித், "யாருடைய துப்பாக்கிச் சூட்டில் ஊடகவியலாளர் கொல்லப்பட்டார் என்பது எங்களுக்குத் தெரியாது. அவர் எப்படி இறந்தார் என்பது எங்களுக்குத் தெரியாது. யுத்த வளையத்திற்குள் நுழையும் எந்தப் பத்திரிகையாளரும் எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அந்தக் குறிப்பிட்ட நபரை நாங்கள் சரியான முறையில் கவனித்துக்கொள்வோம்" என கூறியுள்ளார்.

 

மேலும் ஸபியுல்லா முஜாஹித், "இந்தியப் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் இறந்ததற்காக நாங்கள் வருந்துகிறோம். ஊடகவியலாளர்கள் எங்களுக்குத் தெரிவிக்காமல் யுத்த வளையத்திற்குள் நுழைவது குறித்து வருத்தப்படுகிறோம்" எனவும் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடியுரிமை திருத்தச் சட்டம்; இந்திய அரசுக்கு தாலிபான் அறிவுறுத்தல்!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Afghanistan has advised that the CAA should be implemented on a non-religious basis

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த 11 ஆம் தேதி அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது.

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தங்கள் மாநிலத்தில் சி.ஏ.ஏ சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என்று கூறி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையில், சி.ஏ.ஏ சட்டத்தை ரத்து செய்வதில் சாத்தியம் இல்லை எனவும், அந்த சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக கூறியிருந்தார்.  

இந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை மதவேறுபாடு இன்றி அமல்படுத்தவேண்டும் என தாலிபான் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக  தாலிபான் அரசின்(ஆப்கானிஸ்தான் அரசு) அரசியல் தலைமை அலுவலக தலைவர் சுகைல் ஷாகீன், “இந்தியாவில் சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம்கள் சம உரிமையுடன் நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். இந்தியாவில் புதிதாக அமல் செய்யப்பட்டிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத வேறுபாடு இன்றி அமல்படுத்த வேண்டும். அந்த சட்டத்தில் முஸ்லிம்களையும் சேர்க்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள், இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் சுதந்திரமாக, பாதுகாப்பாக உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரம்; கைது செய்யப்பட்ட 2 பேருக்கு கால் முறிவு!

Published on 27/01/2024 | Edited on 27/01/2024
2 persons arrested in the case of attack on the journalist suffered a broken leg

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் நேசபிரபு. இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவர் வழக்கம்போல் கடந்த 24 ஆம் தேதி செய்தி சேகரித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த ஆயுதத்தால் நேசபிரபுவை சரமாரியாக வெட்டி தப்பி ஓடியுள்ளனர்.

இதில் நேசபிரபு படுகாயமடைந்தார். இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, படுகாயமடைந்த நேசபிரபுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய கும்பலைத் தேடி வந்த போலீஸார், 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 2 பேருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தியபோது தடுக்கி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவருக்கும் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்த பிறகு இன்று நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.