இந்தியா நான்காவது முறையாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 29 பொருள்களுக்கான சுங்க வரி விதிக்கும் முடிவை தள்ளி வைத்துள்ளது.
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாதாம், அக்ருட் மற்றும் பருப்பு உள்ளிட்ட 29 பொருள்கள் மீது கடந்த ஜூன் மாதம், ஆகாஸ்ட் மாதம் 4-ம் தேதியிலிருந்து கூடுதல் சுங்க வரி விதிப்பதென இந்திய அரசு முடிவு செய்தது. அதன் பின் அது 45 நாட்களுக்கு தள்ளி வைத்து செப்டம்பர் மாதம் 18-ம் தேதி முதல் அமல்படுத்தலாம் என முடிவு செய்யப்பட்டது. அதுவும் முடியாமல் மீண்டும் நவம்பர் மாதம் 2-ம் தேதியில் இருந்து அமல்படுத்தலாம் என முடிவு செய்யப்பட்டது. அதுவும் முடியாமல் மீண்டும் அது டிசம்பர் 17 முதல் என அறிவித்திருந்தது. ஆனால் மீண்டும் தற்போது வர்த்தக அமைச்சகம், நிதி அமைச்சகத்திடம் கேட்டுக்கொண்டதன்படி கூடுதல் சுங்க வரி விதிப்பது ஜனவரி 31, 2019 வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாதாம் பருப்பு மீதான தற்போதைய இறக்குமதி வரி 30 சதவீதமாக இருக்கிறது இதனை 120 சதவீதமாக்கவும், கொண்டைகடலை, மசூர் பருப்புகளின் தற்போதைய வரி 30 சதவீதமாக இருக்கிறது இதனை 70 சதவீதமாக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் அலுமினிய பொருட்கள் மீதான வரியை அமெரிக்கா பன் மடங்கு உயர்த்தியது. அதனை தொடர்ந்து மத்திய அரசு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 29 பொருட்கள் மீதான இறக்குமதி சுங்க வரியை அதிகரிப்பதாக அறிவித்தது. அதேசமயம் இந்த பிரச்சனைக்களுக்கு தீர்வுகாண இரு நாடுகளை சேர்ந்த மூத்த அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2017-2018 நிதியாண்டில் இந்தியாவிலிருந்து 47.9 பில்லியன் அமெரிக்க டாலரருக்கு ஏற்றுமதியும், அதேபோல் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு 26.7 பில்லியன் அமெரிக்க டாலருக்கு இறக்குமதியும் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.