ஜார்ஜியா நாட்டில் குடாரி பகுதியில் ‘ஹவேலி’ என்ற உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் இந்தியர்கள் மட்டுமல்லாது அந்நாட்டு நபர்களும் பணிபுரிந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், அந்த உணவகத்தில் வேலை பார்த்து வந்த 11 இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்ட இரண்டாவது மாடியில் படுக்கை அறையில் அவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர்கள் அனைவரும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், கார்பன் மோனாக்சைடு விஷம் பரவி பலியாகியிருப்பது என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், கடந்த 13ஆம் தேதி இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இயக்கப்பட்டிருந்த ஜெனரேட்டரில் இருந்து புகை வெளியாகி பலியாகியிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருப்பினும், மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிய தடவியியல் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜார்ஜியாவில் 11 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதை அங்குள்ள இந்திய தூதரகம் உறுதிப்படுத்தி, 11 பேரின் குடும்பங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளது. ஜார்ஜியாவில் மர்மமான முறையில் 11 இந்தியர்கள் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.