முதன்முறையாக சீனாவில் பரவ தொடங்கிய கரோனா தொற்று, கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பரவி அனைத்து நாட்டு மக்களையும் கடுமையான பாதிப்புக்குள்ளாக்கியது. அதனைத் தொடர்ந்து உலக நாடுகள், ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கரோனா பரவலைக் கட்டுப்படுத்தினர்.
அதனைத்தொடர்ந்து, கரோனாவிற்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, மக்களுக்கு செலுத்தப்பட்டுவருகின்றன. இந்தநிலையில், தற்போது உலக நாடுகளில் கரோனா மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. பிரிட்டன் நாட்டில் தொடர்ந்து 8 நாட்களாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதியான நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று (21.10.2021) 52 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதியானது. ஜூலை 17க்குப் பிறகு அந்தநாட்டில் ஒரேநாளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதியாவது இதுவே முதல்முறையாகும்.
அதேபோல் ரஷ்யாவிலும் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கடந்த வியாழக்கிழமை மட்டும் கரோனாவால் 1,028 பேர் உயிரிழந்தனர். 2020ஆம் ஆண்டில் கரோனா பரவ தொடங்கியதிலிருந்து அந்நாட்டில் இத்தனை உயிரிழப்புகள் ஏற்படுவது இதுவே முதல்முறையாகும். இதனையடுத்து வரும் அக்டோபர் 30ஆம் தேதி முதல், அந்தநாட்டு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சீனாவில் கரோனா பரவல் காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மிகப்பெரிய அளவில் கரோனா பரிசோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூரிலும் கரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. இதனையடுத்து அந்தநாட்டில் விதிக்கப்பட்டுள்ள கரோனா கட்டுபாடுகள் அடுத்த மாதம் 21ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனைகளில் தொடர்ந்து அதிகம் பேர் அனுமதிக்கப்படலாம் என சிங்கப்பூர் சுகாதாரத்துறை கூறியுள்ளது.