பிரான்ஸ் அதிபர் மீது மர்ம நபர் ஒருவர் முட்டை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் அதிபராக இருப்பவர் இமானுவேல் மேக்ரான். இவர் நேற்று (27.09.2021) சர்வதேச உணவு வர்த்தக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தெற்கு பிரான்சில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மர்ம நபர் ஒருவர் அவரின் பின்புறத்தில் இருந்து முட்டை ஒன்றை வீசினார். முட்டை அவரின் முதுகுப்புறத்தில் பட்டு கீழே விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பாதுகாவலர்கள், அவரை சூழ்ந்தனர். எந்தப் பக்கத்திலிருந்து முட்டை வீசப்பட்டது என்பதைக் கவனித்த அதிகாரிகள், முட்டை வீசிய நபரை கண்டறிந்து கைது செய்தனர்.
அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அதிபரிடம் பேச வேண்டும் என்ற நோக்கத்தில்தான் முட்டை வீசினேன் என்று கைது செய்யப்பட்ட நபர் தெரிவித்துள்ளார். விரைவில் அந்நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில், இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மேக்ரானை, இளைஞர் ஒருவர் கன்னத்தில் அறைந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அவர் தாக்கப்படுவது தேர்தல் முடிவுகளில் அவருக்குப் பின்னடைவை தர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.