புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பிரமாண்ட சிவன் சிலை கொண்ட கீரமங்கலம் மெய்நின்றநாதசுவாமி ஆலயம், குளமங்கலம் பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோயில், சேந்தன்குடி நகரம் பாலசுப்பிரமணியர் சுவாமி கோயில் செரியலூர்-கரம்பக்காடு தீர்த்தவிநாயகர் கோயில், முத்துமாரியம்மன் கோயில் உள்பட கொத்தமங்கலம், பனங்குளம், மேற்பனைக்காடு, நெய்வத்தளி உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.
சுவாமி சந்தனக்காப்பு உள்ளிட்ட அலங்காரங்களும் செய்யப்பட்டிருந்தது. கீரமங்கலம் மெய்நின்றநாத சுவாமி ஆலயத்தில் சுவாமி மற்றும் ஒப்பிலாமணி அம்பிகைக்கு தங்க அங்கிகள் அணிவித்தும் வள்ளி-தெய்வானையுடன் சுப்பிரமணியருக்கு சந்தனகாப்பு அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
மேலும், கீரமங்கலத்தில் பிரமாண்ட சிவன் சிலை கொண்ட மெய்நின்றநாத சுவாமி ஆலயத்தில் பழனி பாதயாத்திரைக்குழு பக்தர்கள் மற்றும் இளைஞர்களால் பிரமாண்டமான முறையில் அன்னதானம் வழங்கப்பட்டது. கோயிலுக்கு வந்த பக்தர்கள், சிவன்சிலை அமைந்துள்ள தடாகத்தை சுற்றி வந்து வழிபட்டனர். அதே போல செரியலூர் கிராமத்தில் உள்ள செரியலூர்-கரம்பக்காடு தீர்த்தவிநாயகர் ஆலயத்தில் கிராம இளைஞர்களால் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் கீரமங்கலத்தை சுற்றியுள்ள பல கிராம மக்களும் கலந்து கொண்டனர்.