Skip to main content

2024இல் விளையாட்டு ரசிகர்களை திகைக்க வைத்த, உணர்ச்சிமிக்க தருணங்கள்!

Published on 28/12/2024 | Edited on 28/12/2024
Sports Top Emotional Moments of 2024

விளையாட்டு என்பது வெறும் விளையாட்டாக மட்டுமின்றி அது பங்கேற்பவர்களுக்கும் பார்ப்போருக்கும் இடையே உணர்வைத் தூண்டும். அப்படி இந்தாண்டு முழுவதும் விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்களால் ஏற்பட்ட சில டாப் உணர்ச்சிமிக்க தருணங்களைப் பற்றி பார்ப்போம்.

பெருமையான தருணங்கள்...

இந்தாண்டு இந்தியாவுக்கு ஜாக்பாட் என்று சொல்லலாம், அந்தளவிற்கு அதிகமான பதக்கங்களையும், சாம்பியன் பட்டங்களையும் விளையாட்டு வீரர்கள் வென்றுள்ளனர். நெதர்லாந்து நாட்டில் நடந்த டாடா ஸ்டீல் செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, உலக சாம்பியனான டிங் லிரனை வீழ்த்தி பெருமை சேர்த்தார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அல் ஐன் நகரில் ஆசிய இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 8 வயதான ஷர்வானிகா என்ற சிறுமி, யு-8 கிளாசிக்கல் பிரிவில் வெள்ளிப்பதக்கமும் யு-8 ரேபிட் பிரவு மற்றும் பிளிட்ஸ் பிரிவில் தங்கம் பதக்கமும் பெற்றிருந்தார்.

இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்ற பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் ருத்ராங்க் ஷ் பாட்டீல், மெஹுலி கோஷ் ஜோடி தங்க பதக்கம் வென்று சாதனை படைத்தனர். ஆடவருக்கான 50 மீட்டர் ரைபில் 3 பொசிஷன் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் அகில் ஷியோரன் தங்கப் பதக்கம் வென்று சாதித்தார்.

குரோஷியா நாட்டில் நடைபெற்ற ஜாக்ரெப்பில் ஜாக்ரெப் ஓபன் மல்யுத்த போட்டியில் 57 கிலோ எடைப் பிரிவில் அமன் ஷெராவத் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை தேடித் தந்தார். மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி சாம்பியன் பட்டம் பெற்றது.

தெற்கு ஆசியாவில் முதன் முறையாக நடத்தப்படும் இரவு நேர சாலை ஃபார்முலா 4 கார் பந்தயத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக நடத்தப்பட்டது. இந்த கார் பந்தய நிகழ்ச்சியை துணை முதலமைச்சரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Sports Top Emotional Moments of 2024

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வீரர் அஸ்வின் புதிய சாதனை படைத்திருந்தார்.

ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் தாய்லாந்தை அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

ஹங்கேரியில் நடந்த 45வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய ஆடவர் மற்றும் மகளின் அணி தங்க பதக்கம் வென்று சாதனை படைத்தனர். இதையடுத்து கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் வெற்றி பெற்று உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறி அதிலும் சாம்பியன் பட்டம் பெற்றார்.

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று சாதித்தார்.

டி20 கிரிக்கெட் உலககோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி 17 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி கோப்பையை தட்டி சென்றது.
 

Sports Top Emotional Moments of 2024

பாரிஸில் நடைபெற்ற 33-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இந்தியா சார்பில் போட்டியிட்ட வீரர்கள் 6 பதக்கங்களை வென்றிருந்தனர். இதில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் போட்டியிட்ட மனு பாக்கர் வெண்கலம் வென்று சாதனை படைத்தார். அதன் பின்பு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து மற்றொரு வெண்கல பதக்கம் வென்று சாதித்தனர். அதே நேரத்தில் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

57 கிலோ மல்யுத்தத்தில் அமன் செஹ்ராவத் போட்டியிட்டு வெண்கலம் வென்றார். 50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன் சுப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்ற ஸ்வப்னில் குசலே வெண்கல பதக்கம் வென்று சாதித்தார். இது அவரின் அறிமுக ஒலிம்பிக் போட்டியாகும்.  அதே போல் பாரீசில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டிகளில் 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கல பதக்கங்களுடன் இந்தியா மொத்தம் 29 பதக்கங்களை வென்றது. தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேல்(உயரம் தாண்டுதல்), பாட்மிண்டன் வீராங்கனைகள் துளசிமதி, நித்யஸ்ரீ, மனிஷா ஆகியோர் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

இதில் தொடர்சியாக பாராலிம்பிக் போட்டிகளில் மூன்று முறை பதக்கம் வென்ற வீரர் என்ற பெருமையை மாரியப்பன் தங்கவேல் பெற்றார். அமெரிக்காவில் நடைபெற்ற 6ஆவது உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 வயதான காசிமா 3 தங்கப் பதக்கங்களை வென்று சாதித்திருந்தார்.

சந்தோஷமான தருணங்கள்...

கோவையில் கிரிக்கெட் மைதானத்திற்கான டெண்டர் அறிவிப்பு வெளியானது. பி.சி.சி.ஐ சார்பில் பிளேயர் ஆஃப் தி இயர் விருது நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.

இந்தியாவில் விளையாட்டு துறையின் உயரிய விருதான அர்ஜூனா விருதை முகமது ஷமி (கிரிக்கெட்), கிருஷ்ணன் பகதூர் பதக் (ஹாக்கி), பவன் குமார் (கபடி), ரித்து நெகி (கபடி), நஸ் ரீன் (கோ-கோ), ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (துப்பாக்கி சுடுதல்), ஈஷா சிங் (துப்பாக்கி சுடுதல்), உள்ளிட்ட 27 பேருக்கு சிடைத்தது. மேலும் துரோணாச்சார்யா விருதை லலித்குமார் (மல்யுத்தம்), ஆர்.பி.ரமேஷ் (செஸ்), மஹாவீர் பிரசாத் சைனி (பாரா தடகளம்), சிவேந்திர சிங் (ஹாக்கி), கணேஷ் பிரபாகர் தேவ்ருக்கர் (மல்லகம்ப்) ஆகியோருக்கு கிடைத்தது. துரோணாச்சார்யா விருது, வாழ்நாள் சாதனையாளர் பிரிவில் ஜஸ்கிரத் சிங் கிரேவால் (கோல்ப்), பாஸ்கரன் (கபடி), ஜெயந்த குமார் புஷிலால் (டேபிள் டென்னிஸ்) ஆகியோர் பெற்றுக்கொண்டனர். வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருதை மஞ்சுஷா கன்வர் (பாட்மிண்டன்), வினீத் குமார் சர்மா (ஹாக்கி), கவிதா செல்வராஜ் (கபடி) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

 

Sports Top Emotional Moments of 2024

2019ஆம் ஆண்டிலிருந்து 2023ஆம் ஆண்டுவரை டொமஸ்டிக் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ விருது வழங்கப்பட்டது. இந்த விருதுகளை முகமது ஷமி, அஸ்வின், பும்ரா, கில், ஸ்மிருதி மந்தனா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் பெற்றுக்கொண்டனர். இதில் தமிழகத்தை சேர்ந்த பாபா அபராஜித், லாலா அமர்நாத் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். மேலும் வாழ்நாள் சாதனையாளருக்கான விருதை முன்னாள் வீரர்கள் ஃபரூக் இன்ஜினியர் மற்றும் ரவி சாஸ்திரி பெற்றனர். கவுதம் காம்பீர் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி கொடுக்கப்பட்டது.

கிரிக்கெட் வீரர் முகமது சிராஜுக்கு விளையாட்டு துறையில் அவர் அளித்த பங்களிப்பை கெளரவிக்கும் விதமாக தெலங்கானா அரசு டி.எஸ்.பி. பொறுப்பு வழங்கியது. ஸ்மிருதி மந்தனா தலைமையிலான மகளிர் ஆர்.சி.பி. அணி டபள்யூ.பி.எல். கோப்பை தட்டி சென்றனர்.  ஐ.பி.எல் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கிடையான லீக் சுற்றில் கடைசியாக களமிறங்கிய தோனி மூன்று சிக்சர்களை விளாசியது, அதே போல் சி.எஸ்.கே அணியை ஜெயித்து ஆர்.சி.பி. அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிது ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும்.

சோகமான தருணங்கள்...

பிடித்தமான வீரர்கள் விளையாட்டில் இருந்து ஓய்வு அறிவித்தால் அது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தும். அந்த வகையில் இந்தாண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்து. தென் ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர வீரர் ஹென்ரிச் கிளாசன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்தது. இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்தி மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்து ஓய்வை அறிவித்தது.

 

Sports Top Emotional Moments of 2024

தொழில்முறை மல்யுத்த நட்சத்திர வீரர் ஜான் சீனா ஓய்வு அறிவித்தது, இந்தாண்டு இறுதியில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவித்தது. ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியிருக்கும். இதில் அஸ்வின் மீண்டும் சி.எஸ்.கே. அணியில் இணைந்து விளையாடவிருப்பது அவரது ரசிகர்களுக்கு ஆறுதலாக இருக்கும்.

இந்தோனிசியாவில் 2 எஃப்.எல்.ஒ. பாண்டுங் மற்றும் எஃப்.பி.ஐ. சுபாங் அணிகளுக்கு இடையே நடந்த கால்பந்தாட்ட போட்டியில் திடிரென மின்னல் தாக்கி 35 வயதான செப்டைன் ரஹர்ஜா என்பவர் உயிரிழந்தது, ஜெர்மனி கால்பந்தாட்ட ஜாம்பவான் ஃப்ரான்ஸ் பெக்கன்பேவர் காலமானது, மன உளைச்சலால் இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரஹாம் தோர்ப் தற்கொலை செய்ததாக அவரது மனைவி கூறியது, அண்மையில் ஓய்வு பெற்ற தொழில்முறை மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ சீனியர் உயிரிழந்தது போன்ற மரணங்கள் அந்தந்த விளையாட்டு ரசிகர்களுக்கிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அதிர்ச்சியான தருணங்கள்...

பா.ஜ.க. எம்.பி-யும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அப்போதைய தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் புகார் கூறி அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மல்யுத்த வீரர்கள் சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் பஜ்ரங் புனியா ஆகியோர் போராட்டம் நடத்தியது, 100 கிராம் எடையை காரணம் கூறி பாரிஸ் ஒலிம்பிக்கில் வினேஷ் போகத்தை தகுதி நீக்கம் செய்தது, இந்தியாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன் பிறகு வினேஷ் போகத் தனது ஓய்வை அறிவித்தார். இதே பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டிக்கான 66 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்ற அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் பாலின சர்ச்சைக்குள்ளானது.
 

Sports Top Emotional Moments of 2024

இதனிடையே பராகுவே நாட்டைச் சேர்ந்த இளம் நீச்சல் வீராங்கனை லுவானா அலோன்சோவின் அழகான தோற்றத்தால் சக வீரர்களுக்கு கவனச் சிதறல் ஏற்படும் என  பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து அவரை சொந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டதாக அதிர்ச்சியான தகவல் வெளியானது. இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து, தனது ஓய்வை அறிவித்திருந்தார். இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா, ஷாருக் கான், உள்ளிட்ட 3400 போலி விண்ணப்பங்கள் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மகன் ஜெய் ஷா ஐசிசிக்கு தலைவர் ஆனது சமூகவலைத்தளங்களில் விவாத பொருளானது குறிப்பிடத்தக்கது.

ஆச்சர்யமான தருணங்கள்...

2024க்கு முன்பு ஐ.பி.எல். வரலாற்றில் ஆர்.சி.பி. அணி அடித்திருந்த அதிகபட்ச ரன்களான 263 ரன்களை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆர்.சி.பி. அணிக்கு எதிராக 287 ரன்கள் குவித்து ஆர்.சி.பி. அணியின் சாதனையை முறியடித்தது. ஒரே பெயர் குழப்பத்தால் தவறுதலாக ரூ.20 லட்சத்துக்கு ஷஷாங் சிங் என்ற வீரரை ஏலத்தில் எடுத்ததாக பஞ்சாப் அணி நிர்வாகம் அறிவித்தது. இதற்கு பதில் தரும் விதமாக குஜராத் அணிக்கு எதிராக எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் அவுட் ஆன நேரத்தில் பஞ்சாப் அணிக்காக நிதானத்துடன் ஆடிய ஷஷாங் சிங், 61 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார்.

Sports Top Emotional Moments of 2024

சொந்த அணியினரால் கேலிக்கு உள்ளான மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, திருமண விவாகரத்து சோகத்தில் இருந்தபோதும் நாட்டுக்காக டி20 உலககோப்பை ஃபைனலில் சிறப்பாக விளையாடியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியதோடு கேலி செய்தவர்களை தனக்கு புகழ் பாட வைத்தார். பாரிஸ் ஒலிம்பிக் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் போட்டியில் துருக்கி வீரர் யூசுப் டிகெக், சாதாரண கண்ணாடி மற்றும் சிறிய அளவிலான இயர் பட்ஸ் அணிந்து ஸ்டைலான இலக்கை சுட்டதோடு மட்டுமில்லாமல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

ஏமாற்றமான தருணங்கள்...

ஐ.பி.எலில் ரசிகர்கள் அதிகம் கொண்ட சென்னை அணியின் கேப்டன் தோனி மற்றும் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆகிய கேப்டன்களின் மாற்றம் ரசிகர்களுக்கு ஏமாற்றமே. குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசனை(58) யூ டியூபராக இருந்து குத்துச்சண்டை வீரரான ஜேக் பால் தோற்கடித்தது, பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரை இறுதி சுற்றில் இந்திய அணி போராடி தோல்வியை தழுவியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

 

Sports Top Emotional Moments of 2024

மத்திய அரசு சார்பில் விளையாட்டு துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருக்கான பெயர் பட்டியல் அண்மையில் வெளியானது இதில் பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இரண்டு முறை வெண்கலம் வென்ற மனு பாக்கர் பெயர் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது. ஆடவருக்கான யு(Under)-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிச் சுற்றில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா தோற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. 

- கலேப் கீர்த்தி தாஸ்