உலகை அச்சுறுத்தும் கரோனாவிற்கு எதிராக இதுவரை தடுப்பூசிகள் மட்டுமே பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதுவரை கரோனா சிகிச்சைக்கென பிரத்தேயகமாக எந்த மருந்தும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்தநிலையில் ஏற்கனவே கரோனா தடுப்பூசி ஒன்றைத் தயாரித்துள்ள பைசர், தற்போது மாத்திரை ஒன்றையும் உருவாகியுள்ளது.
பாக்ஸ்லோவிட் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த மாத்திரையைக் கொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட சோதனையில், கரோனா பாதிப்பு தீவிரமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அல்லது மரணமடைவது ஆகிய நிகழ்வுகளை பாக்ஸ்லோவிட் 89 சதவீதம் வரை குறைக்கிறது எனத் தெரியவந்துள்ளதாக பைசர் நிறுவனம் கூறியுள்ளது.
பாக்ஸ்லோவிட் என்பது ஒரு ஆன்டிவைரல் மருந்தும், எச்.ஐ.வி அல்லது எய்ட்ஸ் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ரிடோனாவிர் என்ற மருந்தும் இணைந்த கலவையாகும். இந்த மாத்திரைக்கு விரைவில் அவசரக்கால அங்கீகாரம் கோரி பைசர் நிறுவனம் விண்ணப்பிக்கவுள்ளது.
இதற்கிடையே பிரிட்டன் நாடு, பாக்ஸ்லோவிட் மாத்திரைக்கு தற்போதே பெருமளவில் ஆர்டர் அளித்துள்ளது. மேலும் தங்களது மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, பாக்ஸ்லோவிட் மாத்திரையின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை ஆய்வு செய்யும் என்றும் அந்தநாடு கூறியுள்ளது.