அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் நாடுகளுக்கு மத்தியில் எப்போதும் சர்ச்சைக்குள்ளேயே சிக்கி இருக்கும் நாடு வட கொரியா. அதேபோல், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் சர்ச்சையில் சிக்கி வருவார். ஐ.நா உள்ளிட்ட உலகின் எந்த அமைப்புக்கும் கட்டுப்படாமல் செயல்பட்டு வரும் வட கொரியா அண்டை நாடுகளான ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளை மிரட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணைகளை ஏவி விட்டு பயமுறுத்தி வருகிறது. இதற்கு முன்னரே ஜப்பானை நோக்கி வட கொரிய ராணுவம் ஏவுகணை வீசியதாக செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக ஏற்கனவே பலமுறை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கண்டனம் தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவுக்கு எதிரான கொள்கைக்கு வகுக்க, ஆளும் கட்சி நிர்வாகிகள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் அதிபர் கிம் ஜாங் உன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வடகொரியாவின் பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை கருத்தில் கொண்டு அமெரிக்காவுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டங்கள் வகுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
வட கொரியாவின் எதிரி நாடான ஜப்பான், தென் கொரியா ஆகிய ஆசிய நாடுகளோடு நட்புறவு வைத்திருக்கும் அமெரிக்கா, அவ்வப்போது கூட்டு ராணுவப் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு கடும் எதிர்த்து தெரிவிக்கும் வகையில், அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளை வட கொரியா தற்போது இறங்கியுள்ளது.